திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சந்திரசேகரர் பட்டோற்சவம்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சந்திரசேகரர் பட்டோற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-03-05 15:15 GMT
திருவாரூர், மார்ச்.6-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சந்திரசேகரர் பட்டோற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆழித்ேதரோட்ட விழா 
சைவ சமயங்களில் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவில். இந்த கோவில் ஆழித்தேர் வரலாற்று சிறப்புமிக்கது. பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.   வருகிற 15-ந்தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெறுகிறது.
ைஹட்ராலிக் பிரேக்
தேரோட்ட விழாவை முன்னிட்டு ஆழித்தேருடன், விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களின் கூரைகள் பிரிக்கப்பட்டு அலங்கரிக்கும் பணி தொடங்கியது. அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடி, மொத்த எடை 300 டன் ஆகும். 
திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில், சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது.
சந்திரசேகரர் பட்டோற்சவம்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் உற்சவம், சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சந்திரசேகரர் பட்டோற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு தியாகராஜர் தனது பிரதிநிதியாக சந்திரசேகரரை நியமித்து அவரை கொண்டு விழாவை நடத்தி வைப்பார். அதன் வெளிப்பாடாக சந்திரசேகரர் தியாகராஜர் சன்னதியில் எழுந்தருளி, அவரிடம் இருந்து நியமன பட்டம் ஏற்று கொள்வார். இந்த சிறப்பை விளக்கும் விழாவாக சந்திரசேகரர் பட்டோற்சவம் நடந்தது.
இதனையடுத்து சந்திரசேகரர் பரிவார மூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
---

மேலும் செய்திகள்