ஓவேலி பேரூராட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து தி.மு.க. கவுன்சிலர் ராஜினாமா

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று ஓவேலி பேரூராட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து தி.மு.க. கவுன்சிலர் செல்வரத்தினம் ராஜினாமா செய்தார்.

Update: 2022-03-05 14:57 GMT
கூடலூர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று ஓவேலி பேரூராட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து தி.மு.க. கவுன்சிலர் செல்வரத்தினம் ராஜினாமா செய்தார்.

ஓவேலி பேரூராட்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும் பிடித்தது. மேலும் மா.கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சுயேச்சை தலா 1 இடங்களை கைப்பற்றியது. 

இதற்கிடையில் கடந்த 4-ந் தேதி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்து. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் சித்ரா தேவி போட்டியிட்டார். அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு

இதையடுத்து துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இந்த பதவி தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி அந்த பதவிக்கு, 3-வது வார்டு கவுன்சிலரான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சகாதேவன் வேட்புமனு தாக்கல் செய்தார். 

ஆனால் அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த 18-வது வார்டு கவுன்சிலர் செல்வரத்தினமும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் நடந்த மறைமுக தேர்தலில் 13 வாக்குகள் பெற்று தி.மு.க.வை சேர்ந்த செல்வரத்தினம் வெற்றி பெற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சகாதேவன், 5 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 

ராஜினாமா

இதற்கிடையில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதை ஏற்று ஓவேலி பேரூராட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து செல்வரத்தினம் நேற்று மாலை 6.30 மணிக்கு ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஹரிதாசிடம் வழங்கினார். 

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸ் கூறும்போது, துணைத்தலைவர் பதவியை செல்வரத்தினம் ராஜினாமா செய்து உள்ளார். இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு காலியாக உள்ள துணைத்தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்துவது குறித்த தேதி அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்