பால் குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
கூடலூர் அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பறவை காவடி, பால் குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கூடலூர்
கூடலூர் அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பறவை காவடி, பால் குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேர்த்திருவிழா
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சளிவயலில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்தி விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேயர் சன்னதிகளும் இருக்கிறது. இந்த நிலையில் முத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நேற்று தொடங்கியது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு மகா கணபதி ஹோமமும், காலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றமும் நடந்தது.
தொடர்ந்து 7 மணிக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் 8 மணிக்கு விநாயகர், அம்மன், பாலமுருகனுக்கு அபிஷேக மற்றும் அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 10 மணிக்கு புற்று அம்மனுக்கு பாலாபிஷேகமும், 11 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜையும் நடைபெற்றது.
பறவை காவடி, பால்குடம்
தொடர்ந்து நவக்கிரக பூஜை நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வடமாலை சாத்தப்பட்டது. 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு தாணிமட்டம் ஆற்றங்கரையில் இருந்து கரகம் பாலித்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமிகளுக்கு அபிஷேக மற்றும் அலங்கார சிறப்பு பூஜையும், மதியம் 12 மணிக்கு தாணிமட்டம் ஆற்றங்கரையில் இருந்து மேள-தாளங்கள் முழங்க பக்தர்கள் நேர்த்திக்கடனாக பறவை காவடிகள் எடுத்தும், ஏராளமான பெண்கள் பால்குடம் ஏந்தியும் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
தேரோட்டம்
தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு அம்மன் சன்னதியில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், பாலமுருகன் திருத்தேர் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு அம்மன் கரகம் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தாணிமட்டம் ஆற்றங்கரையில் குடி விடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.