கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையினர் அசாம் விரைந்தனர்

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையினர் அசாம் விரைந்தனர்

Update: 2022-03-05 13:21 GMT
திருப்பூர் யூனியன் மில் ரோடு கே.பி.என்.காலனி 3 வது வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்  இவர் தனது வீட்டின் முன்புறம் நகை அடகு கடை வைத்துள்ளார். வீட்டில் பழுது பார்க்கும் பணிக்காக ஜெயக்குமார் குடும்பத்துடன் தற்போது என்.ஆர்.கே.புரத்தில் வசிக்கிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் ஜெயக்குமார் அடகு கடையை திறந்தார். கடைக்குள் ரேக்குகளில் வைத்திருந்த நகைகளை காணவில்லை. லாக்கரில் இருந்த நகை மற்றும் பணமும் கொள்ளை போனது தெரியவந்தது.
வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்று கடைக்குள் புகுந்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கடையில் இருந்த 3 கிலோ நகை, 9 கிலோ வெள்ளி, ரூ.23 லட்சம் கொள்ளை போனதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு மற்றும் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் 125 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் கொள்ளை போனதாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடமாநில கும்பல்
4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கே.பி.என்.காலனி சுற்றுப்புற பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு மூட்டையாக கட்டி தலையில் சுமந்தபடி நடந்து சென்றனர்.
திருப்பூர் ரெயில் நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் 4 பேரும் ரெயில் நிலையத்துக்கு வந்து அதிகாலையில் சென்னை செல்லும் ரெயிலில் ஏறி சென்றது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர். போலீசார் சென்னை செல்வதற்குள் அந்த கும்பல் அசாம் செல்லும் ரெயிலில் ஏறிச்சென்றது தெரியவந்துள்ளது.
அசாம் விரைந்தனர்
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அசாம் விரைந்துள்ளனர். மர்ம ஆசாமிகளை சுற்றி வளைத்து பிடிக்கும் வகையில் திருப்பூர் மாநகர போலீசார் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
----------------

மேலும் செய்திகள்