புரவிபாளையம் ஊராட்சியில் குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்த புதர் செடிகள்
புரவிபாளையம் ஊராட்சியில் குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்த புதர் செடிகளை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
நெகமம்
புரவிபாளையம் ஊராட்சியில் குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்த புதர் செடிகளை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
கிணற்றை ஆக்கிரமித்த புதர்செடிகள்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் புரவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதியூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றை சுற்றிலும் கம்பிவலை போடப்பட்டு உள்ளதோடு மூடி கொண்டு மூடப்பட்டு உள்ளது. இந்த கிணற்றில் இருந்துதான் பொதுமக்கள் தண்ணீர் எடுத்தனர். தற்போது அந்த கிணற்றின் அருகே புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளது.
மேலும் அந்த கிணற்றின் அருகே அங்கன்வாடி பள்ளி, பகுதி நேர ரேஷன் கடை ஆகியவை செயல்படுகிறது. முட்புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
மின்மோட்டார் பொருத்தி
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- ஆதியூர் கிராமத்தில் அன்றாட தேவைகளுக்காக குடிநீர் கிணறு உள்ளது. தற்போது நல்ல தண்ணீர் உள்ள அந்த கிணற்றில் இருந்து குடிநீரை எடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் அன்றாட தேவைகளுக்கு குடிநீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். குறிப்பாக விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளதால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்புவதில் அச்சம் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கிணற்றை சுத்தம் செய்து அதற்கு மின்மோட்டார் பொருத்தி குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.