தேன்கனிக்கோட்டை பகுதியில் வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி

தேன்கனிக்கோட்டை பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.

Update: 2022-03-05 00:43 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.
பஸ் மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள  பட்டர்தொட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தப்பா (வயது 40). இவரும், அதே பகுதியை சேர்ந்த ரவி (37) என்பவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றனர். பூமரத்துக்குழி வனப்பகுதியில் சென்ற போது ஒகேனக்கல்லில் இருந்து கனகபுரா நோக்கி சென்ற கர்நாடக அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே முத்தப்பா உயிரிழந்தார். ரவி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி
தளி அருகே உள்ள தாசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன வெங்கடேஷ். இவரது மகன் புட்டராஜ் (19). கலுகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் அட்டை கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதகொண்டப்பள்ளியில் இருந்து தளி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தேவகானப்பள்ளி கிராமம் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே புட்டராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்