தலைவர் பதவிக்கான தேர்தல் திடீர் ஒத்திவைப்பு
மயிலாடி பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. போதிய கவுன்சிலர்கள் வராததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஞ்சுகிராமம்:
மயிலாடி பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. போதிய கவுன்சிலர்கள் வராததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடி பேரூராட்சி
மயிலாடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் பா.ஜ.க. 5 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், தி.மு.க. 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு இழுபறியான நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் தலைவர் பதவிக்கான தேர்தலில் தங்களை ஆதரிக்கும்படி அ.தி.மு.க., பா.ஜ.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சுயேச்சை கவுன்சிலர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
தேர்தல் ஒத்திவைப்பு
இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவு சுயேச்சை கவுன்சிலர் சிவசங்கரை அ.தி.மு.க.வினர் கடத்தி சென்றதாக பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மீதும் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மயிலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்காக 4 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். 11 கவுன்சிலர்கள் வரவில்லை.
இதனால் போதிய கவுன்சிலர்கள் வாக்களிக்க வராததால் மயிலாடி பேரூராட்சிக்கான தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தலை ஒத்தி வைத்து அதிகாரி உத்தரவிட்டார்.
கடத்தப்பட்ட கவுன்சிலர் விளக்கம்
இதற்கிடையே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுயேச்சை கவுன்சிலர் சிவசங்கர் தன்னை யாரும் கடத்தவில்லை என வீடியோ வெளியிட்டார். மேலும் துணை சூப்பிரண்டு முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, விசாரணைக்காக அழைத்து சென்ற அ.தி.மு.க.வினர் சிலரை போலீசார் விடுவித்தனர்.