ஆத்தூர், மேட்டூர், தாரமங்கலம், இடங்கணசாலை நகராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு-எடப்பாடி, நரசிங்கபுரம் நகராட்சிகளில் தி.மு.க. வெற்றி
ஆத்தூர், மேட்டூர், தாரமங்கலம், இடங்கணசாலை நகராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எடப்பாடி, நரசிங்கபுரம் நகராட்சிகளில் நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.
சேலம்:
ஆத்தூர், மேட்டூர், தாரமங்கலம், இடங்கணசாலை நகராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எடப்பாடி, நரசிங்கபுரம் நகராட்சிகளில் நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.
6 நகராட்சிகள்
தமிழகத்தில் கடந்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 2-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் நேற்று நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய நகராட்சிகள் உள்ளன. இங்கு நேற்று காலை தலைவர் தேர்தலும், பிற்பகலில் துணைத்தலைவர் தேர்தலும் நடந்தது. அனைத்து நகராட்சிகளிலும் தி.மு.க.வை சேர்ந்தவர்களே தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேட்டூர், எடப்பாடி
மேட்டூர் நகராட்சி தலைவராக ஜி.சந்திரா, துணைத் தலைவராக எஸ்.ஜி. காசிவிஸ்வநாதன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆணையாளர் அண்ணாமலை மற்றும் கவுன்சிலர்கள், முன்னாள் தலைவர் துபாய் கந்தசாமி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
எடப்பாடி நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சேகர் தலைமையில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் பாஷா, அ.தி.மு.க. சார்பாக முருகன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பாஷா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ராதா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆத்தூர், நரசிங்கபுரம்
ஆத்தூர் நகராட்சி தலைவர் தேர்தலுக்கான மறைமுக தேர்தல் ஆணையாளர் பொன்னம்பலம் தலைமையில் நடந்தது. இதில் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த 32-வது வார்டு கவுன்சிலர் நிர்மலா பபிதா தலைவராகவும், 13-வது வார்டு கவுன்சிலர் கவிதா ஸ்ரீராம் துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். நரசிங்கபுரம் நகராட்சி பதவிக்கான மறைமுக தேர்தலை ஆணையாளர் மகேஸ்வரி நடத்தினார். தேர்தலில் தி.மு.க. சார்பில் எம்.அலெக்சாண்டர், அ.தி.மு.க. சார்பில் சித்ரா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 12 வாக்குகள் பெற்று அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.
இதேபோல துணைத்தலைவர் பதவி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.தர்மராஜ், அ.தி.மு.க. சார்பில் கோபி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் எஸ்.தர்மராஜ் 11 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றிபெற்ற தலைவர் அலெக்சாண்டர், துணைத்தலைவர் தர்மராஜ் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
இடங்கணசாலை, தாரமங்கலம்
இடங்கணசாலை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 15 வார்டுகளிலும், பா.ம.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றன. இந்த நிலையில் நேற்று நடந்த மறைமுக தேர்தலில் 12-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த கமலக்கண்ணன் முதல் நகராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த தளபதி துணைத்தலைவராக ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தாரமங்கலம் நகராட்சியில் நேற்று நடந்த மறைமுக தேர்தலில் மொத்தம் உள்ள 27 வார்டு உறுப்பினர்களில் 19 உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மீதமுள்ள 8 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான மங்கையர்க்கரசன் மறைமுக தேர்தலை நடத்தினார். அப்போது தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் டி.எம்.எஸ். குணசேகரன் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், குணசேகரன் போட்டியின்றி தேர்வானார். அதன்படி அவர் தாரமங்கலம் நகராட்சியின் முதல் தலைவரானார். தொடர்ந்து துணைத்தலைவராக 16-வது வார்டு உறுப்பினர் தனம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.