அய்யா வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம்
தி.மு.க. கூட்டணி சார்பில் கொல்லங்கோடு நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக தி.மு.க. சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் ராணி வெற்றி பெற்றார்.
கொல்லங்கோட:
தி.மு.க. கூட்டணி சார்பில் கொல்லங்கோடு நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக தி.மு.க. சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் ராணி வெற்றி பெற்றார்.
கொல்லங்கோடு நகராட்சி
குமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு நகராட்சி புதிதாக உருவாக்கப்பட்டது. நகராட்சியாக உருவாக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கடந்த மாதம் 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது.
இங்குள்ள 33 வார்டுகளில் தி.மு.க. 10 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 10 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், பா.ஜ.க. 5 இடங்களிலும், அ.தி.மு.க. 1 இடத்திலும், தே.மு.தி.க. ஒரு இடத்திலும் வென்றது. கொல்லங்கோடு நகராட்சியில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நகராட்சி தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கீடு
இதனால் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் கொல்லங்கோடு நகராட்சி தலைவர் பதவியை பிடிப்பதற்கான ஆயத்த பணியில் தனித்தனியாக ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே கொல்லங்கோடு நகராட்சி தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கி தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக 15-வது வார்டு கவுன்சிலர் லலிதா அறிவிக்கப்பட்டார்.
தி.மு.க. வேட்பாளர் போட்டியாக நிறுத்தம்
இந்த நிலையில் நேற்று காலையில் நகராட்சி அலுவலகத்தில் நடந்ந தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. அதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் வேட்பாளராக லலிதாவும், தி.மு.க. சார்பில் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் ராணியும் போட்டியிட்டனர்.
அதே சமயத்தில் பா.ஜ.க. சார்பில் 31-வது வார்டில் போட்டியிட்டு வென்ற கவுன்சிலர் சுதாவும் தலைவர் பதவிக்கான தேர்தல் களத்தில் குதித்தார்.
தி.மு.க. வெற்றி
பின்னர் தலைவர் பதவியை தேர்ந்தெடுக்க கவுன்சிலர்கள் ஓட்டு போட்டனர். இதில் தி.மு.க. வேட்பாளர் ராணி 18 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் லலிதாவுக்கு 10 ஓட்டுகளும், பா.ஜ.க. வேட்பாளர் சுதாவுக்கு 5 ஓட்டுகளும் விழுந்தன. தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் தி.மு.க. வேட்பாளர் போட்டியாக நிறுத்தப்பட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
கொல்லங்கோடு நகராட்சியின் முதல் தலைவர் என்ற பெருமையை ராணி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை தலைவர் தேர்வு
துணை தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5-வது வார்டு கவுன்சிலர் பேபி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு எதிராக பா.ஜ.க. கவுன்சிலர் பத்மகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவுன்சிலர் விஜய மோகனன் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.