‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பழுதான ஆழ்துளை கிணறு
நாமக்கல் மாவட்டம் காக்காவேரி ஊராட்சி பச்சபாளிபுதூர் கிராமத்தில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதங்களாக ஆழ்துளை கிணறு பழுதடைந்து சரி செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் இல்லாமல் ஊர் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றி பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சக்திவேல், காக்காவேரி, நாமக்கல்.
===
போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதி ரவுண்டானா 4 முனை சந்திப்பு, பிரதானமான சாலையாகும். இங்கு நடைபெற்று வரும் சாலை பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலை வழியாக பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை வழியாக புதுச்சேரி, சேலத்திலிருந்து வேலூர் வழியாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. மேலும் வாகனங்கள் செல்ல மாற்றுபாதை இல்லாமலும், எச்சரிக்கை பலகை இல்லாமலும் உள்ளதால் சாலையை கடக்க வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வருகிறது. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கிருஷ்ணகிரி.
===
ஜல்லிக்கற்கள் பரப்பிய சாலை
சேலம் சூரமங்கலத்தை அடுத்துள்ள ஆண்டிப்பட்டியில் இருந்து போடிநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் தார் சாலை அமைப்பதற்காக கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. 40 நாட்களுக்கு மேல் ஆகியும் தார்சாலை போடாததால் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு இருப்பதால் வயதானவர்கள் தடுக்கி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது வாகனங்கள் பஞ்சர் ஆகி விடுகிறது. பள்ளி வாகனம் மற்றும் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோன்ஸ், ஆண்டிப்பட்டி, சேலம்.
===
நடவடிக்கை எடுப்பார்களா?
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் வசிக்கும் மக்கள் பல ஆண்டுகளாக வீடு, நிலம் ஆகியவற்றுக்கு பத்திரப்பதிவு செய்ய மல்லசமுத்திரம் செல்லும் நிலை உள்ளது. இதனால் கால விரயம் ஏற்படுகிறது. மேலும் வயதானவர்கள் அதிக தூரம் செல்ல சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி வெண்ணந்தூரில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
===
தடுப்புசுவர் அமைக்க வேண்டும்
தர்மபுரி நகரை ஒட்டி உள்ள ஏரிகளில் ஒன்றான பிடமனேரியில் தற்போது முழு கொள்ளளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த ஏரிக்கரையை ஒட்டியுள்ள சாலை தர்மபுரி நகரையும் சேலம் - பெங்களூர் பைபாஸ் சாலையையும் இணைக்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. ஏரிக்கரை பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாததால் இந்த சாலையில் செல்பவர்கள் சற்று கவனம் தடுமாறினாலும் ஏரி தண்ணீருக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை ஒட்டி உள்ள ஏரிக்கரையில் தடுப்பு சுவர் அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதேஷ், தர்மபுரி.
===