சாலை விபத்தில் பள்ளி தலைமையாசிரியர் பலி

சாலை விபத்தில் பள்ளி தலைமையாசிரியர் பலியானார்

Update: 2022-03-04 22:01 GMT
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள வீரடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 46). இவர் கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டிபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மேலும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார். இவருக்கு பிரகதாம்பாள் என்கிற மனைவியும், அருளி, பாலபாரதி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று இரவு பக்கத்து கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆனால், இரவு வெகுநேரமாகியும் சக்திவேல் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது பருக்கைவிடுதி பகட்டுவான்பட்டி ஆகிய ஊர்களுக்கு இடையே உள்ள பாலத்தின் அருகே சக்திவேலின் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கிடப்பதை கண்டனர். அருகில், சக்திவேல் இறந்து கிடந்தார். இதுகுறித்து சக்திவேலின் உறவினர் தங்கராஜ், கந்தர்வகோட்டை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தில் அவர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்