போட்டியின்றி தேர்வானார்: ஈரோடு மாநகராட்சியின் மேயராக எஸ்.நாகரத்தினம் பதவி ஏற்பு- ஆணையாளர் சிவக்குமார் வெள்ளி செங்கோலை வழங்கினார்
ஈரோடு மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வாகி நேற்று பதவி ஏற்ற எஸ்.நாகரத்தினத்திடம் வெள்ளி செங்கோலை ஆணையாளர் சிவக்குமார் வழங்கினார்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வாகி நேற்று பதவி ஏற்ற எஸ்.நாகரத்தினத்திடம் வெள்ளி செங்கோலை ஆணையாளர் சிவக்குமார் வழங்கினார்.
மேயர் தேர்தல்
ஈரோடு மாநகராட்சியின் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. தேர்தல் அதிகாரியாக ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் செயல்பட்டார். அப்போது மாநகராட்சியின் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.
புதிய மேயராக நாகரத்தினம் வெற்றி
ஆணையாளர் இருக்கையில் அமர்ந்ததும், அரங்கில் இருந்த கவுன்சிலர்களிடம் வருகைப்பதிவேட்டில் கையெழுத்து பெறப்பட்டது. பின்னர் மேயர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்று ஆணையாளர் சிவக்குமார் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து 50-வது வார்டு கவுன்சிலராக இருந்த எஸ்.நாகரத்தினம் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான மனுவை கவுன்சிலர்கள் 2 பேர் வழிமொழிந்து ஆணையாளரிடம் வழங்கினார்கள். பின்னர் 10.30 மணி வரை காலக்கெடு வழங்கப்பட்டது. அதுவரை யாரும் கூடுதலாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எனவே எஸ்.நாகரத்தினம் ஈரோடு மாநகராட்சியின் மேயராக வெற்றி பெற்றதாக ஆணையாளர் சிவக்குமார் அறிவித்தார்.
மகிழ்ச்சி
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கவுன்சிலர்களும் கைகளை தட்டி கரவொலி எழுப்பியும், மேஜையை தட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஈரோடு மாநகராட்சியின் புதிய மேயராக வெற்றி பெற்ற எஸ்.நாகரத்தினத்துக்கு அனைத்து கவுன்சிலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கொ.ம.தே.க. வேட்பாளர்கள் 48 பேரும், சுயேச்சை கவுன்சிலர்கள் 6 பேரும் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் பங்கேற்கவில்லை. அவர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
பதவி ஏற்பு
புதிய மேயர் எஸ்.நாகரத்தினம் பதவி ஏற்பு நிகழ்ச்சி உடனடியாக நடந்தது. மேயர் நாகரத்தினம், கூட்ட அரங்கை ஒட்டி உள்ள மேயர் அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு மேயருக்கான சிவப்பு நிற அங்கி அணிவிக்கப்பட்டது. இதற்கிடையே சிங்க முத்திரையுடன் கூடிய மேயருக்கான சிம்மாசனம் மேடையில் வைக்கப்பட்டது. மேயரின் அடையாளமான வெள்ளி செங்கோலை கையில் ஏந்தியபடி மாநகராட்சி பணியாளர் முன்வர, எஸ்.நாகரத்தினம் சிவப்பு அங்கி அணிந்து மேடைக்கு வந்தார். அவரை வணங்கி வரவேற்ற, ஆணையாளர் சிவக்குமார், மேயரின் அடையாளமான வெள்ளி செங்கோலை மேயர் நாகரத்தினத்திடம் வழங்கி பதவி ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். அப்போதும் கவுன்சிலர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பின்னர் அவருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேயர் எஸ்.நாகரத்தினம் மேயருக்கான சிம்மாசனத்தில் (நாற்காலியில்) உட்கார வைக்கப்பட்டார்.
துணை மேயர் செல்வராஜ்
இதுபோல் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர் தேர்தல் நடந்தது. துணை மேயராக 21-வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற வி.செல்வராஜ் மட்டுமே மனுதாக்கல் செய்தார். கூட்டத்தில் மேயர் மற்றும் 53 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் கலந்து கொள்ளவில்லை. துணை மேயர் பதவிக்கு வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. எனவே ஈரோடு மாநகராட்சி துணை மேயராக வி.செல்வராஜ் வெற்றி பெற்றதாக ஆணையாளர் சிவக்குமார் அறிவித்தார். அவர் கூட்ட மன்ற மேடைக்கு வரவழைக்கப்பட்டு துணை மேயருக்கான இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அவருக்கு மேயர் நாகரத்தினம், ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். துணை மேயர் செல்வராஜூக்கு கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஈரோடு மாநகராட்சியின் மேயர் எஸ்.நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோருக்கு ஈரோடு மாநகர தி.மு.க. செயலாளர் மு.சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் குமார் முருகேஸ், ஆ.செந்தில்குமார், அ.செல்லப்பொன்னி, கோகிலவாணி மணிராசு, அக்னி சந்துரு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மண்டல தலைவர் ஜாபர்சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
பாதுகாப்பு
ஈரோடு மாநகராட்சியில் மறைமுக தேர்தல் நடைபெற்றதையொட்டி ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் தெய்வராணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு எற்பாடுகளை செய்து இருந்தனர். கூட்ட அரங்குக்கு கவுன்சிலர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மேயர், துணை மேயர் பதவி ஏற்றுள்ள நிலையில், 4 மண்டலங்களுக்கான தலைவர்கள் விரைவில் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். இந்த பதவியை பிடிப்பது யார் என்ற போட்டி தற்போது தொடங்கி உள்ளது.