லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் பணிஇடை நீக்கம்- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை

லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்களை பணிஇடை நீக்கம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை எடுத்தார்.

Update: 2022-03-04 21:56 GMT
ஈரோடு
லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்களை பணிஇடை நீக்கம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை எடுத்தார். 
லஞ்சம் கேட்டு...
சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தின் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் தினமும் கர்நாடகாவுக்கு சென்று வருகிறது. கடந்த 2-ந்தேதி இரவு கர்நாடகா நோக்கி ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் 2 பேர் லாரியை நிறுத்தி, ஜீப்பில் இருந்து கொண்டே லாரி டிரைவரை அழைத்தனர்.
பின்னர் லாரி டிரைவரிடம் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி கொண்டு போலீஸ்காரர்கள் லஞ்சம் கேட்டனர். அப்போது அந்த லாரி டிரைவர் ‘தன்னிடம் ரூ.50 தான் உள்ளது, அதை வைத்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். ஆனால் போலீசார் அதை வாங்க மறுத்து ரூ.200 கொடுத்துவிட்டு செல்லுங்கள். இல்லை என்றால் உங்கள் மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டினர்.
வைரலான வீடியோ
அதற்கு பதிலளித்த டிரைவர் தினமும் ரூ.50 கொடுத்துவிட்டு தான் செல்கிறேன். நீங்கள் மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்குகிறீர்கள். என்னிடம் ரூ.200 கேட்பது நியாயமா? என்றார். இதைத்தொடர்ந்து போலீசார் ரூ.100 கொடு என்று கூறினர்.
பின்னர் லாரி டிரைவர் பணத்தை கொடுத்துவிட்டு செல்கிறார். லாரி டிரைவரிடம் போலீசார் லஞ்சம் கேட்டு பேரம் பேசியதை அருகில்  இருந்த  ஒருவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
பணிஇடை நீக்கம்
இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது தாளவாடி போலீஸ்காரர் செல்லகுமார், பங்களாபுதூர் போலீஸ்காரர் கந்தசாமி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். 
இந்த நிலையில் அந்த 2 போலீஸ்காரர் மீது துறை ரீதியான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மேற்கொண்டார். அதன்படி போலீஸ்காரர்கள் செல்லகுமார், கந்தசாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்