நகராட்சி தலைவர், துணை தலைவர் தேர்வு

நகராட்சி தலைவர், துணை தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-03-04 21:00 GMT
பெரம்பலூர்:

தி.மு.க. கைப்பற்றியது
பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 15 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. இதனால் கடந்த முறை அ.தி.மு.க. வசம் இருந்த பெரம்பலூர் நகராட்சியை, தற்போது தி.மு.க. தனிப்பெருபான்மையுடன் கைப்பற்றி தன் வசமாக்கியது.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குமரிமன்னனிடம் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அப்போது நகர்மன்ற கூட்ட அரங்கில் மற்ற கவுன்சிலர்களும் அமர்ந்திருந்தனர். மற்ற நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கவுன்சிலர்கள் செல்போன், பேனா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
நகராட்சி தலைவராக பொறுப்பேற்பு
அம்பிகா ராஜேந்திரனை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர் பெரம்பலூர் நகராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் குமரிமன்னன் அறிவித்தார். பின்னர் அதற்கான சான்றிதழை, அவருக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து அம்பிகா ராஜேந்திரன் நகராட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டு, தனது இருக்கையில் அமர்ந்து அதற்கான கோப்பில் முதலில் கையெழுத்திட்டார்.
அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூர் நகராட்சியை முதன்மை நகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து, பாடுபட வேண்டும், என்றார். பின்னர் அம்பிகா ராஜேந்திரனுக்கு, நகராட்சி ஆணையர் மற்றும் கவுன்சிலர்களும், தி.மு.க.வினரும், அதன் கூட்டணி கட்சியினரும், ஆதரவாளர்களும், முக்கிய பிரமுகர்களும் சால்வை அணிவித்தும், ஆளுயர மாலை அணிவித்தும், புத்தங்கள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தனக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பார்வையிட்டார்.
துணைத் தலைவரும் போட்டியின்றி தேர்வு
பின்னர் நேற்று மதியம் பெரம்பலூர் நகராட்சி துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நகர்மன்ற கூட்டரங்கில் நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் ஹரிபாஸ்கர், தேர்தல் நடத்தும் அலுவலர் குமரிமன்னனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் பெரம்பலூர் நகராட்சி துணைத் தலைவராக ஹரிபாஸ்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார். இதைத்தொடர்ந்து ஹரிபாஸ்கர் தனது இருக்கையில் அமர்ந்து, பெரம்பலூர் நகராட்சி துணைத் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டு, அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அவருக்கு, ஆணையர், கவுன்சிலர்கள், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், ஆதரவாளர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரனும், துணைத் தலைவர் ஹரிபாஸ்கரும் கட்சி அலுவலகத்தில் இருந்த தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்