நெல்லை மாநகராட்சி மேயராக பி.எம்.சரவணன் பொறுப்பேற்றார்
நெல்லை மாநகராட்சி மேயராக பி.எம்.சரவணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். துணை மேயராக கே.ஆர்.ராஜூ தேர்வு செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேயராக பி.எம்.சரவணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். துணை மேயராக கே.ஆர்.ராஜூ தேர்வு செய்யப்பட்டார்.
மறைமுக தேர்தல்
55 உறுப்பினர்களை கொண்ட நெல்லை மாநகராட்சிக்கு கடந்த 19-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. 44 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இந்த கவுன்சிலர்கள் அனைவரும் கடந்த 2-ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் நெல்லை மாநகராட்சி ராஜாஜி மையக்கூட்டரங்கில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 50 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
மேயர் பி.எம்.சரவணன்
நெல்லை மாநகராட்சி 16-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பி.எம்.சரவணன் மேயர் பதவிக்கு மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை 10-வது வார்டு கவுன்சிலர் கந்தன், 40-வது வார்டு கவுன்சிலர் வில்சன்மணித்துரை ஆகியோர் வழிமொழிந்தனர். இவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதையடுத்து பி.எம்.சரவணன் மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் அறிவித்தார். இவர் நெல்லை மாநகராட்சியின் 6-வது மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.எம்.சரவணனுக்கு ஆணையாளர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவருக்கு மேயர் அங்கியை அணிவித்து செங்கோல் வழங்கி மேயர் இருக்கையில் அமர வைத்தார். அப்போது அனைத்து கவுன்சிலர்களும் மேஜையில் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
துணை மேயர் கே.ஆர்.ராஜூ
இதைத்தொடர்ந்து பிற்பகலில் துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இந்த பதவிக்கு நெல்லை மாநகராட்சி 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கே.ஆர்.ராஜூ ஆணையாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் துணை மேயராக கே.ஆர்.ராஜூ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு ஆணையாளர் பதவிப்பிரமாணம் செய்து வைத்து அவரது இருக்கையில் அமரவைத்தார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் விஜிலா சத்யானந்த், நெல்லை சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், புதிய மேயர் மற்றும் துணை மேயருக்கு கவுன்சிலர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
பலத்த பாதுகாப்பு
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலையொட்டி நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநகராட்சி வளாகத்தில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
மாநகராட்சிக்கு வந்த அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தேர்தல் நடந்த கூட்டரங்கில் கவுன்சிலர்கள் யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அ.தி.மு.க.வினர் பங்கேற்கவில்லை
மேயர் தேர்தலில் பங்கேற்க தி.மு.க. கவுன்சிலர்கள் 5 வேன்களில் காலை 10 மணிக்கு அழைத்து வரப்பட்டனர். இதேபோல் மதியம் 2 மணிக்கு துணை மேயர் தேர்தலுக்கும் வந்தனர். தேர்தல் முடிந்ததும் அதே வேன்களில் அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் வரவில்லை.
அண்ணா சிலைக்கு மாலை
பதவி ஏற்பு விழாவையொட்டி தி.மு.க.வினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
மேயராக பொறுப்பேற்ற பின்னர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை, பாளையங்கோட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.