திசையன்விளை பேரூராட்சி தலைவர் தேர்தலை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் தர்ணா போராட்டம்
திசையன்விளை பேரூராட்சி தலைவர் தேர்தலை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
திசையன்விளை:
திசையன்விளை பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில், தேர்வு செய்யப்பட்ட 18 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் கவுன்சிலர் ஜான்சிராணியும், தி.மு.க. கூட்டணி சார்பில் சுயேச்சை கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த கமலா நேருவும் போட்டியிட்டனர். இதில் இருவருக்கும் சம ஓட்டுகள் அதாவது தலா 9 ஓட்டுகள் கிடைத்ததால், தலைவர் தேர்வு குலுக்கல் முறையில் நடந்தது. அதில் ஜான்சிராணி வெற்றி பெற்றதாக பேரூராட்சி செயல் அலுவலர் கோபால் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தலை ரத்து செய்யக்கோரியும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கள் சமயசிங் மீனா, மதிவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், திசையன்விளை தாசில்தார் செல்வகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் கோபால் ஆகியோர் பேச்சவார்த்தை நடத்தினர். அதை ஏற்று தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க. கூட்டணி கட்சியினரை வெளியேற்றக்கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.