முதல் மேயர் - துணைமேயர் பதவியேற்று கொண்டனர்

சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயரும், துணை மேயரும் பதவியேற்று கொண்டனர். அவர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வாழ்த்தினார்.

Update: 2022-03-04 20:12 GMT
சிவகாசி, 
சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயரும், துணை மேயரும் பதவியேற்று கொண்டனர். அவர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வாழ்த்தினார். 
பதவியேற்பு விழா
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள 2-வது மாடியில் மேயர் பதவியேற்பு விழா நடைபெற்றது. பதவி ஏற்பு விழா குறித்து ஏற்கனவே அனைத்து கவுன்சிலர்களுக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. 
10-வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்த சாந்தி சரவணன், 30-வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்த கரைமுருகன் ஆகியோர் பதவியேற்பு விழாவிற்கு வராமல் புறக்கணித்தனர். அதேசமயத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஸ்கரன் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்.  
மேயராக தேர்வு
பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக மேயர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சங்கீதா இன்பம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் 16-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுகன்யா முன்மொழிந்து கையெழுத்திட்டார். அவரை தொடர்ந்து 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திருப்பதி வழிமொழிந்தார். அந்த விருப்ப மனு கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டது. அவர் மனுவை பரிசீலனை செய்ய சிறிது நேர கால அவகாசம் எடுத்துக்கொண்டார். 
மனுதாக்கல் செய்ய ஒதுக்கப்பட்ட நேரம் முடியும் வரை வேறு யாரும் மேயர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யவில்லை. அதை தொடர்ந்து சங்கீதா இன்பம் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்படுவதாக கமிஷனர் கிருஷ்ண மூர்த்தி அறிவித்தார். சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்ட சங்கீதாவுக்கு சபையில் இருந்த கவுன்சிலர்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
தங்கம்தென்னரசு
மேயர் பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகம் வெளியே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்து இருந்தனர். சங்கீதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட தகவல் கிடைத்ததை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் 2-வது மாடிக்கு சென்று மேயராக பதவி ஏற்றுக்கொண்ட சங்கீதா இன்பத்துக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 
அவரை தொடர்ந்து கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. மாநில நிர்வாகி வனராஜா, சிவகாசி யூனியன் துணைத் தலைவர் விவேகன்ராஜ், ஒன்றிய செயலாளர் தங்கராஜ், சிவகாசி நகர பொறுப்பாளர் காளிராஜன், பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம், திருத்தங்கல் நகர பொறுப்பாளர் உதயசூரியன், சபையர் ஞானசேகரன், பொன்சக்திவேல், கே.வி.கந்தசாமி, பலராமன், லெனின்கிருஷ்ணமூர்த்தி, சீனிவாச பெருமாள், வெயில் ராஜ், ராமமூர்த்தி, சரவணக்குமார், அதி வீரன்பட்டி செல்வம் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து  மாநகராட்சி கவுன்சிலர்கள் சால்வை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 
துணை மேயர் 
சிவகாசி மாநகராட்சியின் துணை மேயராக விக்னேஷ் பிரியா காளிராஜன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று மதியம் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போது அவருக்கு மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 
அதைத் தொடர்ந்து மேயர் சங்கீதா இன்பம், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்