கரூரில் பேரூராட்சி தலைவர்- துணைத்தலைவர்கள் பதவி ஏற்பு
கரூர் மாவட்டத்தில் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். உப்பிடமங்கலத்தில் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
கரூர்,
அரவக்குறிச்சி பேரூராட்சி
அரவக்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் 4,915 ஆண்களும், 5,469 பெண்களும் என மொத்தம் 10 ஆயிரத்து 384 வாக்காளர்கள் உள்ளனர்.
தற்போது அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பதவி பெண் (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், நாம்தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 55 பேர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றனர். இதன் மூலம் அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
தலைவர்-துணைத்தலைவர்
இந்தநிலையில் நேற்று அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவராக 7-வது வார்டில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ஜெயந்தி மணிகண்டனும், துணைத்தலைவராக 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற தங்கராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் அனைத்து கவுன்சிலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
உப்பிடமங்கலம்
உப்பிடமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், 15-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ஜெயசக்திவேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் 14 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 13 வார்டுகளை தி.மு.க.வும், ஒரு வார்டை சுயேச்சை வேட்பாளரும் கைப்பற்றினர். இந்தநிலையில் சுயேச்சை வேட்பாளர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்தநிலையில், உப்பிடமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 15 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இந்தநிலையில், 2-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் திவ்யா தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை 9-வது வார்டு உறுப்பினர் வண்ணமயில் முன்மொழிய, 8-வது வார்டு உறுப்பினர் பாக்கியலட்சுமி வழிமொழிந்து இருந்தார். திவ்யாவை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரான பானுஜெயராணி அறிவித்தார். இதையடுத்து அவர் பேரூராட்சி தலைவராக கையெழுத்திட்டு பதவியேற்றுக்கொண்டார்.
துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பு
உப்பிடமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவருக்கான தேர்தல் மதியம் 2.30 மணியளவில் நடைபெற இருந்தது. ஆனால் 3 கவுன்சிலர்கள் மட்டுமே வந்தனர். மதியம் 3 மணி வரை 12 கவுன்சிலர்கள் வரவில்லை. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலரான பானு ஜெயராணி துணைத்தலைவருக்கான தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், தலைவர் தேர்தலைபோல் துணைத்தலைவர் தேர்தலையும் போட்டியின்றி நடத்த கவுன்சிலர்கள் நினைத்து இருந்தனர். ஆனால் 8-வது வார்டில் வெற்றி பெற்ற பாக்கியலட்சுமியும், 15-வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்ற ஜெயசக்தி வேலுவும் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினர். எனவே அவர்களுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மற்ற கவுன்சிலர்களும், கட்சியினரும் ஈடுபட்டிருந்ததால் குறிப்பிட்ட நேரத்தில் வார்டு கவுன்சிலர்கள் வாக்களிக்க செல்லவில்லை என்றனர்.
ஒத்திவைக்கப்பட்ட உப்பிடமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவருக்கான தேர்தல் மீண்டும் நடைபெறும்போது ஒரு மனதாக துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா? இல்லை போட்டி இருக்குமா? என்பது தெரியவரும்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க. 14 வார்டுகளையும், அ.தி.மு.க. ஒரு இடத்தையும் பிடித்தது. இதைத்தொடர்ந்து தலைவர் பதவிக்கு 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சேதுமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக பேரூராட்சி நிர்வாக அலுவலர் சண்முகவடிவேல் அறிவித்தார். தற்போது பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சேதுமணியின் கணவர் மகாலிங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆவார். இவர் இறந்து 54-வது நாளில் சேதுமணி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி துணைத்தலைவராக 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வளர்மதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மருதூர்
மருதூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 13 வார்டுகளிலும், அ.தி.மு.க., சுயேச்சைகள் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து இந்த பேரூராட்சி தலைவராக சகுந்தலா தி.மு.க. தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இந்த பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று காலை தலைவருக்கான மறைமுக தேர்தலும், மதியம் துணைத்தலைவருக்கான தேர்தலும் நடைபெற்றது. தலைவருக்கு வேறு எவரும் போட்டியிடாத காரணத்தால் சகுந்தலா பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதுபோல் துணைத்தலைவர் பதவிக்கு நாகராஜன் என்பவர் மட்டுமே போட்டியிட்டதால் அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான ராஜகோபால் தெரிவித்தார். இதையடுத்து தலைவர் மற்றும் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட சகுந்தலா மற்றும் நாகராஜனுக்கு வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க. 12 வார்டுகளையும், அ.தி.மு.க., பா.ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு வார்டை கைப்பற்றின. இதைத்தொடர்ந்து தலைவர் பதவிக்கு 4-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சவுந்தர பிரியா வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக பேரூராட்சி நிர்வாக அலுவலர் குமாரவேலன் அறிவித்தார். பேரூராட்சி துணைத்தலைவராக 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வேலுச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நங்கவரம்
நங்கவரம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க. 15 வார்டுகளையும், அ.தி.மு.க. ஒரு வார்டையும், சுயேட்சைகள் 2 வார்களையும் கைப்பற்றினர். இந்தநிலையில், நங்கவரம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 18 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், 17-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் ராஜேஸ்வரி தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் 10-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் அன்பழகன் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, அவர்கள் 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் செயல் அலுவலர் வேல்முருகன் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.
புஞ்சை தோட்டக்குறிச்சி
புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பதவி (பொது) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று காலை 9.30 மணியளவில் பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் ரூபா தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக பேரூராட்சி செயலாளர் ரமேஷ் அறிவித்தார். பின்னர் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவருக்கான தேர்தல் மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது. இதில் 14-வது வார்டு கவுன்சிலர் சதீஷ் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.