திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 159 பவுன் நகை-ரூ.12 லட்சம் கொள்ளை

லால்குடி அருகே திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 159 பவுன் நகை, ரூ.12 லட்சம் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-03-04 19:50 GMT
லால்குடி,மார்ச்.5-
லால்குடி அருகே திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 159 பவுன் நகை, ரூ.12 லட்சம் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமண மண்டப உரிமையாளர்
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த நெருஞ்சலகுடி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர்  ஏகாம்பரம், திருமண மண்டப உரிமையாளர். இவரது மனைவி கமலம் என்ற மாலதி (வயது 58). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். ஏகாம்பரம் ஏற்கனவே இறந்து விட்டார்.இந்த நிலையில் கமலம் என்ற மாலதி கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள இளைய மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனிடையே சொந்த ஊரில் உள்ள வயலில் நெல் அறுவடை பணியை கவனிப்பதற்காக கடந்த 3-ந்தேதி இரவு 10 மணி அளவில்  கமலம் என்ற மாலதி நெருஞ்சலகுடிக்கு வந்துள்ளார்.
நகை-பணம் கொள்ளை
பின்னர் அவர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது, பீரோ மற்றும் இரும்பு பெட்டி வைத்திருந்த அறை கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ேள சென்று பார்த்தபோது, அந்த அறையில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
இதுகுறித்து அவர் லால்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில்  பீரோவில் வைத்திருந்த 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் இரும்பு பெட்டியில் வைத்து இருந்த 159 பவுன் நகைகள், ரூ.12 லட்சம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க சுவற்றை தாண்டி வந்து, பின்பக்க கதவை உடைத்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
வலைவீச்சு
சம்பவம் நடைபெற்ற வீட்டில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் ஆகியோரும் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து கொண்டனர். 3 மோப்ப நாய்கள் சம்பவம் நடைபெற்ற வீட்டை மோப்பம் பிடித்துவிட்டு சிறிதுதூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்திவருகிறார்.மேலும்கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்