கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் சுந்தரி வெற்றி

கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர் போட்டியிட்ட நிலையில், கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றார். துணை மேயராக வி.சி.க. வேட்பாளர் தாமரைச்செல்வன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.;

Update: 2022-03-04 19:02 GMT
கடலூர், 

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந்தேதி நடந்தது. இதில் தி.மு.க. 27 வார்டுகளையும், அ.தி.மு.க. 6 வார்டுகளையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலா 3 வார்டுகளையும், காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க. தலா ஒரு வார்டுகளையும், 3 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட முதல் தேர்தலிலேயே கடலூர் மாநகராட்சியை தி.மு.க. பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.
இதையடுத்து வெற்றி பெற்ற 45 வார்டு கவுன்சிலர்களும் கடந்த 2-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து நகராட்சி மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அந்தந்த கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி மாநகராட்சி மேயர் பதவிக்கு 20-வது வார்டு தி.மு.க.வேட்பாளர் சுந்தரியும், துணை மேயர் பதவிக்கு 34-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தாமரைச்செல்வனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

சொகுசு ஓட்டலில் கவுன்சிலர்கள்

இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 28 பேர் மாயமானதாக தகவல் பரவியது. இது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்த போது, மேயர் பதவியை 2-வது வார்டு கவுன்சிலர் கீதா குணசேகரனும் கட்சி தலைமையிடம் கேட்டு வந்தார். 

ஆனால் அவருக்கு சீட் வழங்காததால், அதிருப்தி அடைந்த அவர் தன்னுடைய ஆதரவு கவுன்சிலர்களை புதுச்சேரியில் உள்ள சொகுசு ஓட்டலில் முக்கிய பிரமுகர் ஒருவர் துணையுடன் தங்க வைத்தது தெரிந்தது. இதனால் தி.மு.க. நிர்வாகிகளிடையே பரபரப்பு நிலவியது.

2 பேர் வேட்பு மனு தாக்கல்

இதற்கிடையில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான தேர்தல் நேற்று காலை நடந்தது. இதற்காக 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கீதா குணசேகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு எதிராக தி.மு.க.வினர் சிலர் கோஷமிட்டனர். உடனே போலீசார் அவர்களை பாதுகாப்பாக மாநகராட்சி அலுவலகத்திற்குள் அழைத்துச்சென்றனர். 

அங்கு மேயர் பதவிக்கு போட்டியிட கீதா குணசேகரன், ஆணையாளர் விஸ்வநாதனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் கட்சி தலைமை அறிவித்த தி.முக. வேட்பாளர் சுந்தரி, மேயர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். 10 மணி வரை 32 கவுன்சிலர்களே மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

சுந்தரி வெற்றி

சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படும் 5 தி.மு.க. கவுன்சிலர்கள், 2 சுயேச்சை கவுன்சிலர்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை. 6 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதையடுத்து தேர்தலை நடத்த பெரும்பான்மையான (32 பேர்) கவுன்சிலர்கள் இருந்ததால் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 32 கவுன்சிலர்களும்  வாக்களித்தனர். 

பின்னர் அந்த வாக்குச்சீட்டுகள் ஆணையாளர் விஸ்வநாதன் தலைமையிலும் வட்டார தேர்தல் அதிகாரி பவன்குமார் ஜி.கிரியப்பனவர், நுண் பார்வையாளர் அரவிந்த்ஜோதி முன்னிலையில் எண்ணப்பட்டன. முடிவில் 19 வாக்குகள் பெற்று தி.மு.க. கட்சி சார்பில் அதிகாரபூர்வ வேட்பாளராக போட்டியிட்ட சுந்தரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட கீதா குணசேகரன் 12 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சுந்தரிக்கு மேயருக்கான அங்கி அணிவிக்கப்பட்டது. பின்னர் அவர், செங்கோல் ஏந்தி மேயராக பதவி ஏற்றார். அவருக்கு ஆணையாளர் விஸ்வநாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்த விழாவில் எம்.ஆர்.கே.பி. கதிரவன், நகர செயலாளர் ராஜா மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேயராக பதவி ஏற்ற சுந்தரிக்கு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

துணை மேயர் போட்டியின்றி தேர்வு

இதையடுத்து மதியம் 2.30 மணி அளவில்  துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 22 கவுன்சிலர்கள் வரவில்லை. மீதியுள்ள 23 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பெரும்பான்மையான கவுன்சிலர்கள் இருந்ததால், துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் துணை மேயர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தாமரைச்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

ஆனால் அவருக்கு எதிராக வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரும் உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த மறைமுக தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்