ஆரணி நகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த ஏ.சி.மணி தலைவராக தேர்வு

ஆரணி நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏ.சி.மணி தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க.வை சேர்ந்தவர் துணைத்தலைவரானார்.

Update: 2022-03-04 18:52 GMT
ஆரணி

ஆரணி நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏ.சி.மணி தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க.வை சேர்ந்தவர் துணைத்தலைவரானார்.

நகராட்சி தலைவர் தேர்தல்

ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி 18 வார்டுகளிலும்,  அ.தி.மு.க. 15 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

இவர்கள் அனைவரும் கடந்த 2-ந்தேதி நகராட்சி அலுவலக வெளி வளாகத்தில் உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். 

இதனை தொடர்ந்து நேற்று ஆரணி நகராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. 

தி.மு.க. வெற்றி

தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தி.மு.க. சார்பில் ஏ.சி.மணியும், அ.தி.மு.க. சார்பில் பாரி பி.பாபுவும் தாக்கல் செய்தனர். 

தேர்தல் நடந்ததில் தி.மு.க. கூட்டணியில் 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில் 20 வாக்குகள் பெற்று தலைவராக ஏ.சி.‌மணி வெற்றி பெற்றார். இதனால் அ.தி.மு.க. 15 உறுப்பினர்களில் 2 பேர் தி.மு.க.வுக்கு வாக்களித்தது தெரியவந்தது. 

பிற்பகல் 2.30 மணி அளவில் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது இதில், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மருதேவி பொன்னையன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க. சார்பில் பாரி பி.பாபுவும் மனுதாக்கல் செய்தார்.2 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. 
இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த பாரி பி.பாபு 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் இருந்து 3 பேர் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து உள்ளார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. 

ஆரணி நகராட்சி தலைவராக ஏ.சி.மணி தேர்வு செய்யப்பட்டதால் காலையில் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர். 
அதேபோல் துணைத்தலைவராக அ.தி.மு.க. வெற்றி பெற்றதால் மாலையில் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

பதவி ஏற்பு விழாவில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், அ.கோவிந்தராஜன், தாட்சாயணி அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சிவானந்தம், ராஜாபாபு, ஆரணி ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் உள்பட தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். 

தி.மு.க.-அ.தி.மு.க. ஊர்வலம்

முற்பகலில் தலைவராக தி.மு.க.வை சேர்ந்தவர் வெற்றி பெற்றதால் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து ஊர்வலமாகச் சென்றனர். மாலையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து ஊர்வலமாக சென்றனர்.

மேலும் செய்திகள்