நாகையில், 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
நாகப்பட்டினம்:
நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
காற்றழுத்த தாழ்வு நிலை
வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நாகை மாவட்டத்தில் 2 நாட்கள் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனை கருத்தில் கொண்டு நாகை மாவட்ட விவசாயிகள், அறுவடைக்கு தயாராக உள்ள நெல்வயல்கள் மற்றும் பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
3-ம் எண் எச்சரிக்கை கூண்டு
இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி தென்மேற்கு திசையில் நகர்ந்து நாகைக்கு 390 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டது. இதனால் நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
நாகையை பொறுத்தவரை நேற்று காலை முதலே லேசான மழை விட்டு, விட்டு பெய்தது. தொடர்ந்து மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
இதன் காரணமாக நாகையில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களது விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கடுவையாற்று கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்