மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெற்றி
திருத்துறைப்பூண்டி நகரசபை துணைத்தலைவர் பதவிக்கு கட்சி மேலிடம் அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த நகராட்சியில் தலைவராக மனைவியும், துணைத்தலைவராக கணவரும் தேர்வாகி உள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகரசபை துணைத்தலைவர் பதவிக்கு கட்சி மேலிடம் அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த நகராட்சியில் தலைவராக மனைவியும், துணைத்தலைவராக கணவரும் தேர்வாகி உள்ளனர்.
மறைமுக தேர்தல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரசபை தேர்தலில் உள்ள 24 வார்டுகளில் தி.மு.க. 14 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்டு 1 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
நேற்று நகரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் நகரசபை தலைவராக கவிதா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள், தி.மு.க.வுக்கு ஆதரவு
திருத்துறைப்பூண்டி நகரசபை துணைத்தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தி.மு.க. தலைமை ஒதுக்கியது. துணைத்தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ராமலோக ஈஸ்வரி வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 11-வது வார்டு மற்றும் 24-வது வார்டு நகரசபை உறுப்பினர்கள் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாண்டியனுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து நகரசபை துணைத்தலைவராக பாண்டியன் தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையர் சந்திசேகரன் அறிவித்தார்.
தலைவர்-மனைவி, துணைத்தலைவர்-கணவர்
திருத்துறைப்பூண்டி நகரசபை தலைவராக கவிதாவும், துணைத்தலைவராக அவரது கணவர் பாண்டியனும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.