பழையனூர் சுந்தரமகாலிங்கம் கோவில் தேரோட்டம்
பழையனூர் சுந்தரமகாலிங்கம் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
சிவகங்கை,
பழையனூர் சுந்தரமகாலிங்கம் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
சுந்தரமகாலிங்கம் கோவில்
சிவகங்கை மாவட்டம், பழையனூர் கிராமத்தில் உள்ள அங்காள ஈஸ்வரி உடனமர் சுந்தரமகாலிங்கம், சந்தன கருப்பண சுவாமி கோவில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந்தேதி இரவு கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது..அதனைத் தொடர்ந்து, தினசரி சுவாமி, அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் நேற்று முன்தினம் இரவு சுந்தரமகாலிங்கம் பிரியாவிடையுடன் காளை வாகனத்திலும், அங்காள ஈஸ்வரி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டு மந்தையம்மன் கோவில், மேலத்தெரு, நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
தேரோட்டம்
முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர், சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தேரடிக்கு எழுந்தருளினர். மாலை 4 மணியளவில் புறப்பட்ட தேர், தேரடி வீதி வழியாக வலம் வந்து 6 மணியளவில் நிலைக்கு வந்தடைந்தது.
இதில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) இரவு தேர் தடம் பார்த்தல், பூஜை பெட்டி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.