அ.ம.மு.க. ஆதரவுடன் ேதவகோட்டை நகராட்சியை கைப்பற்றிய அ.தி.மு.க.
தேவகோட்டை நகராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை அ,ம.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. கைப்பற்றியது.
காரைக்குடி,
தேவகோட்டை நகராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை அ,ம.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. கைப்பற்றியது.
தேவகோட்டை நகராட்சி
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய 3 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றிய நிலையில், தேவகோட்டை நகராட்சியில் மட்டும் அ.தி.மு.க. ஆதிக்கம் செலுத்தியது. |
தேவகோட்டை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் அ.தி.மு.க. 10 இடங்களிலும், அ.ம.மு.க. 5 இடங்களிலும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. |
இந்நிலையில் அ.தி.மு.க.விற்கு அ.ம.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததால் அ.தி.மு.க.வின் பலம் 15-ஆக உயர்ந்தது. |
அதிகாரி மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் மறைமுக தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தேர்தலை நடத்தும் அலுவலரும், தேவகோட்டை நகராட்சி ஆணையாளருமான அசோக்குமார் திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறுமா? என பரபரப்பு ஏற்பட்டது. |
இதையடுத்து காலை 9 மணிக்கு சொகுசு பஸ்சில் வந்து இறங்கிய அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.கவைச் சேர்ந்த 15 கவுன்சிலர்களும் நகராட்சியில் காத்திருந்தனர். அதன் பின்னர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்ற 12 கவுன்சிலர்களும் அங்கு வந்தனர். இதையடுத்து தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் அதிகாரி அங்கு இல்லாததால் தேர்தல் நடைபெறுமா? அல்லது நிறுத்தி வைக்கப்படுமா? என்ற நிலை ஏற்பட்டது. |
இதை தொடர்ந்து காலை 10.30 மணி வரை காத்திருந்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதன் பின்னர் அங்கிருந்த தேர்தல் உதவி அலுவலரும், நகராட்சி பொறியாளருமான மதுசூதனனிடம் அ.தி.மு.க கவுன்சிலர்கள் முறையிட்டு தேர்தலை நடத்த கோரினர். |
அ.தி.மு.க. கைப்பற்றியது
பின்னர் இது குறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் தகவல் தெரிவித்து, தேர்தலை நடத்த அனுமதி கேட்டார். கலெக்டர் அனுமதி அளித்ததை தொடர்ந்து தேவகோட்டை கோட்டாட்சியர் (பொறுப்பு) மங்களநாதன் முன்னிலையில் மதியம் 1 மணிக்கு தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து தேர்தலை புறக்கணித்து சென்ற தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களின் வீடுகளில் தேர்தலில் வந்து பங்கேற்கும்படியாக நோட்டீசை வழங்க நகராட்சி அலுவலர்கள் சென்றனர். அங்கு கவுன்சிலர்கள் வீட்டில் இல்லாததால் வீடுகளில் அந்த நோட்டீசை ஒட்டி விட்டு வந்தனர். |
அதன் பின்னர் தேர்தல் விதியின்படி மறைமுக தேர்தலை நடத்த மெஜாரிட்டி கவுன்சிலர்கள் 15 பேர் இருந்ததால் போட்டியின்றி அ.தி.மு.க.வைச் சேர்ந்த சுந்தரலிங்கம், நகராட்சி தலைவராக வெற்றி பெற்றார் என தேர்தல் அதிகாரி அறிவித்தார். |
துணைத்தலைவர் தேர்தல்
அதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு துணைத்தலைவருக்கான தேர்தலில் 3-வது வார்டு கவுன்சிலரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ரமேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. |
அதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் அங்கிருந்த கோப்புகளில் கையெழுத்திட்டு வெளியே வந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை நகராட்சியை அ.தி.மு.க கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். |
தேவகோட்டை நகராட்சி தேர்தலையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் கூடுதல் சூப்பிரண்டு சீமைச்சாமி, 5 துணை சூப்பிரண்டுகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். |