மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருத்துறைப்பூண்டி நகராட்சி துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பெண் கவுன்சிலர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நாடார் தெருவில் வசிப்பவர் ரகுராமன்(வயது 45). இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருத்துறைப்பூண்டி நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி ராமலோக ஈஸ்வரி(38).
இவர், சமீபத்தில் நடந்த நகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக திருத்துறைப்பூண்டி நகராட்சி 11-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தலைவர்-துணை தலைவர் பதவி
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. உறுப்பினர் கவிதாவும், துணைத்தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ராமலோக ஈஸ்வரியும் போட்டியிடுவார்கள் என்று தி.மு.க. கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் ராம லோக ஈஸ்வரி, கணவர் ரகுராமன் மாமியார் கஸ்தூரி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டு இருந்தார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
நள்ளிரவில் ராமலோக ஈஸ்வரி வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். பெட்ரோல் குண்டு வெடித்து சிதறிய சத்தம் கேட்டு ராம லோக ஈஸ்வரியின் குடும்பத்தினர் பதறியடித்து வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது வீட்டின் காம்பவுண்டு சுவற்றில் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. அதைப்பார்த்து ரகுராமனின் தாயார் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் எழுந்து வந்து வீட்டின் சுவற்றில் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர்.
கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு
இந்த சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் ரகுராமன் புகார் செய்தார். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், தனிப்பிரிவு போலீஸ்காரர் பிரான்சிஸ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? அவர்கள், எந்த பகுதியில் இருந்து வந்தார்கள்? இருசக்கர வாகனத்தில் வந்தார்களா? அல்லது கார் போன்ற வாகனங்களில் வந்தார்களா? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரைவில் கைது
இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் நிருபர்களிடம் கூறுகையில், பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் யார்? என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் யார்? என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
நகராட்சி துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் திருத்துறைப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.