தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

Update: 2022-03-04 17:49 GMT
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

குண்டும் குழியுமான சாலை 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள நெல்லியாளம் குன்றில்கடவு பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தேயிலை தோட்டங் களுக்கு நடுவே இந்த சாலை செல்வதால் வனவிலங்குகள் நடமாட்டமும் இருக்கும் என்பதால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
மணி, குன்றில்கடவு.

சாலையில் குவிந்துள்ள மணல்

  பொள்ளாச்சி-கோவை மெயின் ரோட்டில் வாகன விபத்துகளை தடுக்க ரோட்டின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்புச்சுவர் அருகே மணல் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். வேகமாக வரும்போது இந்த மணல் மீது வாகனங்கள் ஏறும்போது நிலை தடுமாறி கீழே விழக்கூடிய நிலையும் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் மணல் தேங்கி கிடப்பதை அகற்ற வேண்டும்.
  கவுதம், சுல்தான்பேட்டை.

ஒளிராத தெருவிளக்குகள்

  கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில மாதங்களாக ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அத்துடன் இரவில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவில் அச்சத்துடன் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து ஒளிராத மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
  தங்கம், கூடலூர்.

ஆபத்தான பாதை

  கோவை ரெயில் நிலையம் அருகில் உள்ள லங்கா கார்னர் ரெயில்வே பாலத்தின் கீழ் சாலையில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் உள்ளது. அதன்மீது மூடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து உள்ளன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதற்குள் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை சரிசெய்ய வேண்டும்.
  மீனாட்சி, கோவை.

வீணாகும் குடிநீர்

  கோவை காந்திபுரம் டவுன் பஸ்நிலையத்துக்கு வரும் பயணி களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு குடிநீர் தொட்டியும் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குடிநீர் தொட்டிக்கு தண்ணீரை ஏற்றும்போது தொட்டி நிரம்பிய பின்னரும், மோட்டாரை நிறுத்துவது இல்லை. இதனால் தண்ணீர் வீணாக பஸ்நிலைய பகுதியில் வெளியேறி வருகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேணடும்.
  சுபாஷ், கோவை.

பகலில் ஒளிரும் விளக்கு

  கோவை காந்திபுரம் 100 அடி சாலை சிக்னல் பகுதி அருகே மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் சில விளக்குகள் பகலிலும் ஒளிர்ந்து வருகிறது. இதனால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை. அத்துடன் மின்சாரம்தான் வீணாகி வருகிறது. எனவே பகலில் ஒளிரும் விளக்கை சரிசெய்து அந்த விளக்கு இரவில் மட்டும் ஒளிர வழிவகை செய்ய வேண்டும்.
  டேவிட், காந்திபுரம்.

பயணிகள் அவதி 

  மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும்போது அமர்ந்து இருக்க இருக்கை வசதிகள் உள்ளன. இங்கு மதுபிரியர்கள் போதையில் படுத்து உறங்குகிறார்கள். இதனால் பயணிகள் அமர முடியாமல் கால்கடுக்க நின்று கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு படுத்து உறங்கும் போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
  குமார், மேட்டுப்பாளையம்.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் 

  கோவை அவினாசி சாலை லட்சுமி மில் சந்திப்பு சிக்னல் அருகே சாலை ஓரத்தில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அந்த கழிவுநீரை பீய்ச்சி அடிப்பதால் நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க வேண்டும்.
  வசந்த்குமார், பாப்பநாயக்கன்பாளையம்.

பழுதான ரோடு

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெக்குபாளையம், காந்திநகர் வழியாக புதுப்புதூர் செல்ல சாலை வசதி உள்ளது. இந்த சாலை வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
ஜெகதீஸ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.
  
  

மேலும் செய்திகள்