தேரோடும் 4 வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
திருவாரூர் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு தேரோடும் 4 வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர்:
திருவாரூர் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு தேரோடும் 4 வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
ஆய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில்,
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டமானது வருகிற 15-ந்தேதி காலை 8.10 மணியளவில் வடம் பிடித்து தொடங்கி வைக்கப்படுகிறது. 96 அடி உயரம், 300 டன் எடை கொண்ட ஆழித்தேர் அலங்கரிக்கப்படுகிறது. தேரோட்டத்தையொட்டி துறைவாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போலீஸ்துறை பொருத்தமட்டில் தேரோட்டம் நடைபெறும் போது தேருக்கு முன்னும் பின்னும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
தேரோட்டத்தின் போது தேர்சக்கரங்களை சுற்றி பொதுமக்கள் வராமலிருக்க கயிறு வளையம் அமைக்கப்பட வேண்டும். தேரோட்டம் சிறப்பாகவும், விரைவாகவும் நடைபெறும் வண்ணம் பொதுமக்களையும், தேர் இழுக்கும் பணியாளர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். நகராட்சியின் மூலம் தேரோட்டத்தின் நாளுக்கு முன்னதாகவும், பின்னதாகவும் குடிநீர் வசதி மற்றும் கழிவறைகள் செய்து கொடுக்க வேண்டும். ஆழித்தேரோட்டம் தடையின்றி நடைபெற தேரோடும் 4 வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தடையில்லா மின்சாரம்
தேர் வீதிகளில் வரும்போது தேருக்கு பின்னால், அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு வண்டி ஒன்று தேரினை தொடர்ந்து வர செய்ய வேண்டும். கமலாலயம் குளக்கரையில் படகு மற்றும் நீச்சல் பயிற்சி பெற்ற காவலரை கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
பொதுப்பணித்துறையினர் தேர் கட்டுமான பணிகளை அவ்வப்போது பார்வையிட்டு தேவையான அறிவுரையை திருக்கோவிலுக்கு வழங்க வேண்டும்.
மின்சாரத்துறையினர் தேரோட்ட தினத்திற்கு 3 நாள் முன்னும் பின்னும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். மருத்துவத்துறையினர் மாவட்ட ஆஸ்பத்திரியில் தேரோட்ட தினத்திற்கு இரண்டு நாள் முன்னும், பின்னும் 24 மணி நேரமும் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியாற்ற வேண்டும்.
முழு ஒத்துழைப்பு
தேரோட்டம் நடைபெறும்போது தேரினை பின் தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு ஒன்று தேவையான மருந்துகளுடன் ஆம்புலன்சில் வர வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு எளிதாக திரும்பி செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதி செய்து தர வேண்டும். கோவில் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்த அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திருவாரூர் நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, திருவாரூர் உதவி கலெக்டர் பாலசந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) மோகனசுந்தரம், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், தியாகராஜர் கோவில் செயல் அலுவலர் கவிதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
---