தி.மு.க.வேட்பாளர் பாத்திமா பஷீரா வெற்றி

கூத்தாநல்லூர் நகரசபை தலைவர் பதவியில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் பாத்திமா பஷீரா ெவற்றி பெற்றுள்ளார்.

Update: 2022-03-04 17:37 GMT
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் நகரசபை தலைவர் பதவியில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் பாத்திமா பஷீரா ெவற்றி பெற்றுள்ளார். 
கூத்தாநல்லூர் நகராட்சி 
கூத்தாநல்லூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 17 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு 2 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும், சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றது.
 20-வது வார்டில் வெற்றி பெற்ற பாத்திமா பஷீராவை நகரசபை தலைவராக தேர்வு செய்ய  தி.மு.க. வேட்பாளர்கள் முடிவு செய்து பாத்திமா பஷீராவுக்கு ஆதரவு தெரிவித்து, வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 
நேற்றுமுன்தினம் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியை  கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு, தி.மு.க. தலைமை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியானது. 
இந்த அறிவிப்பை 17 வார்டுகளில் தனித்து வெற்றி பெற்று, முழு மெஜாரிட்டியுடன் உள்ள தி.மு.க.வேட்பாளர்கள் ஏற்க மறுத்தனர். 
தி.மு.க. வேட்பாளர் வெற்றி 
இந்தநிலையில் 1-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெற்றி பெற்ற தனலெட்சுமி என்பவர், கூத்தாநல்லூர் நகரசபை தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என தெரியவந்தது. 
இதனால் கூத்தாநல்லூர் நகரசபை தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் நேற்று தி.மு.க.வேட்பாளர் பாத்திமா பஷீரா கூத்தாநல்லூர் நகரசபை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 
சான்றிதழ் 
நகராட்சி என்ஜினீயர் ராஜகோபால் முன்னிலையில், கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிருஷ்ணவேணி, நகரசபை தலைவராக வெற்றி பெற்ற, தி.மு.க.வேட்பாளர் பாத்திமா பஷீராவுக்கு அதற்கான சான்றிதழை வழங்கினார். 
வெற்றி பெற்ற  கூத்தாநல்லூர் நகரசபை தலைவர் பாத்திமா பஷீராவுக்கு தி.மு.க.வினர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்