போட்டி தி.மு.க. வேட்பாளர் களம் இறங்கியதால் மோதல்

போட்டி தி.மு.க. வேட்பாளர் களம் இறங்கியதால் மோதல்

Update: 2022-03-04 17:15 GMT
போட்டி தி.மு.க. வேட்பாளர் களம் இறங்கியதால் மோதல்
அன்னூர்

கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க 7வார்டுகளிலும், கம்யூனிஸ்டு கட்சி 2 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும் வெற்றி பெற்றது. இது தவிர பா.ஜனதா 1 வார்டிலும் மற்றும் சுயேச்சைகள் 4 வார்டிலும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு தலைவருக்கான மறைமுக தேர்தல் தொடங்கியது. தி.மு.க தலைமை அறிவித்த வேட்பாளர் விஜயகுமார் மனுதாக்கல் செய்தார்.  ஆனால் போட்டி வேட்பாளராக  தி.மு.க.வை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் களம் இறங்கினார். கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். 

இதையடுத்து தேர்தல் நடைபெறும் என தேர்தல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி அறிவித்தார். 10.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 15 கவுன்சிலர்களும் வாக்களித்தனர். பின்னர் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி தொடங்கினார்.
அப்போது திடீரென தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.  இதில்பேரூராட்சி அறையில் இருந்த ஜன்னல்,கண்ணாடிகள்  உடைக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் 9 ஓட்டுச் சீட்டுகள் கிழித்தெறியப்பட்டன. இதனால் தேர்தல் அலுவலரிடம் 6 ஓட்டு சீட்டுகள் மட்டுமே மீதம் இருந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து மறு தேதி குறிப்பிடப்படாமல் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது என தேர்தல் நடத்தும் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி அறிவித்தார். இதனையடுத்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இதற்கிடையில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் விஜயகுமாரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க.வை சேர்ந்த பரமேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்க கோரி தி.மு.க.வினர் பேரூராட்சி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்