சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் வாக்குச்சீட்டுகள் கிழிப்பு
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் வாக்குச்சீட்டுகள் கிழிக்கப் பட்டன. இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் வாக்குச்சீட்டுகள் கிழிக்கப் பட்டன. இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மறைமுக தேர்தல்
பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க வேட்பாளர்கள் 15 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். தலைவர், துணை தலைவர் பதவிக்கு பேரூராட்சி அலுவலகத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்றது.
தி.மு.க. சார்பில் தலைவர் பதவிக்கான வேட்பாளராக 5-வது வார்டு கவுன்சிலர் ராகினி அறிவிக்கப்பட்டார். அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தனம்மாளிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வாக்குச்சீட்டுகள் கிழிப்பு
அப்போது போட்டியாக 2-வது வார்டு கவுன்சிலர் வனிதாவும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து நடந்த மறைமுக தேர்தலில் வனிதா 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் வழங்கப ்பட்டது.
இந்த நிலையில் கவுன்சிலர் ராகினியின் தந்தை ஆறுச்சாமி கூட்ட அரங்கிற்குள் புகுந்து அங்கு இருந்த வாக்குசீட்டுக்களை பறித்து கிழித்து தனது சட்டை பாக்கெட்டில் போட்டுவிட்டு ஓடிவிட்டார். இதையடுத்து வெற்றி பெற்றதற்காக அறிவிக்கப்பட்ட சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வனிதாவிடம் இருந்து திரும்ப வாங்கியதாக தெரிகிறது.
போலீசார் பாதுகாப்பு
இதனால் ஆத்திரம் அடைந்த வனிதாவின் ஆதரவாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டனர். இதையடுத்து போலீசார் நுழைவு வாயிலை பூட்டி யாரையும் உள்ளே விடாமல் தடுத்தனர். சிலர் தடுப்பு சுவர் மீது ஏறி குதித்து உள்ளே வருவதற்கு முயற்சி செய்தனர். இதை தொடர்ந்து அலுவலகத்தின் நாலாபுறமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.
மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்கு சீட்டு இல்லாததால் தலைவர் வெற்றியை அறிவிக்க முடியாது என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க.வினர் முற்றுகை
அத்துடன் மாலை 4 மணிக்கு பிறகு தி.மு.க.வினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் வனிதா வெற்றி பெற்றதாக அறிவிக்கும்படி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சமசரம் ஏற்படாததால் இரவு 7 மணி ஆகியும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் 5-வது வார்டு கவுன்சிலர் ராகினி, 2-வது வார்டு கவுன்சிலர் வனிதா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனைக்கு பின் நடந்த வாக்குப் பதிவில் 15 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.
தேர்தல் ஒத்திவைப்பு
வாக்குகள் பிரித்து எண்ணிக்கையின்போது கவுன்சிலர் ராகினியின் தந்தை ஆறுச்சாமி போலீஸ் பாதுகாப்பினை மீறி கூட்டரங்கிற்குள் அத்துமீறி நுழைந்து வாக்குச்சீட்டுக்களை பறித்து கிழித்ததுடன் அதை தனது சட்டை பாக்கெட்டில் போட்டு ஓடி விட்டார்.
எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. சட்ட-ஒழுங்கு பிரச்சினை காரணமாக தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.