வால்பாறை நகராட்சி தலைவர் மறைமுக தேர்தலில் போட்டி வேட்பாளருக்கு வாக்களித்த கவுன்சிலர்கள் மீது தாக்குதல்
வால்பாறை நகராட்சி தலைவர் மறைமுக தேர்தலில் போட்டி வேட்பாளருக்கு வாக்களித்த கவுன்சிலர்கள் மீது தாக்குதல் நடந்தது. இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
வால்பாறை
வால்பாறை நகராட்சி தலைவர் மறைமுக தேர்தலில் போட்டி வேட்பாளருக்கு வாக்களித்த கவுன்சிலர்கள் மீது தாக்குதல் நடந்தது. இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
வால்பாறை நகராட்சி
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 20 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்தையும் பிடித்தது. இதையடுத்து தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது.
தி.மு.க. சார்பில் தலைவர் பதவிக்கான வேட்பாளராக 10-வது வார்டு கவுன்சிலர் காமாட்சி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
போட்டி வேட்பாளர்
அப்போது திடீரென்று 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அழகு சுந்தரவள்ளியும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சுரேஷ்குமார், கவுன்சிலர் களிடம் வாக்குச்சீட்டை கொடுத்து வாக்களிக்கும்படி கூறினார். இதையடுத்து மறைமுக தேர்தல் நடந்தது.
அப்போது அழகுசுந்தர வள்ளி வெற்றிபெற சாதகமான சூழ்நிலை நிலவியதாக கூறப் படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டனர்.
கவுன்சிலர்கள் மீது தாக்குதல்
சிலா் நகர்மன்ற கூட்ட அரங்குக்குள் புகுந்து தலைமை அறிவித்த வேட்பாளரைதான் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டனர். அப்போது சிலர் போட்டி வேட்பாளரான அழகு சுந்தரவள்ளிக்கு ஆதரவாக வாக்களித்த கவுன்சிலர்கள் சிலரை தாக்கியதாகவும் தெரிகிறது.
இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் அந்த அரங்கில் இருந்த மைக்குகளை உடைத்து எறிந்ததுடன், கவுன்சிலர்கள் வாக்களித்த வாக்குச்சீட்டுகளை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இது குறித்து தகவலறிந்த தி.மு.க.வை சேர்ந்த மற்றொரு தரப்பினர் அங்கு திரண்டனர். இதன் காரணமாக அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் தலைமை அறிவித்த வேட்பாளரைதான் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மற்றொரு தரப்பினர் வாக்கெடுப்பு நடந்ததை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். அத்துடன் இருதரப்பினரும் நகராட்சி அலுவலகம் அருகே சாலையில் அர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஒத்திவைப்பு
இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் அறிவித்தார். மேலும் அந்த அறிவிப்பு நகராட்சி அறிவிப்பு பலகை யிலும் ஒட்டப்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, வால்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் இருதரப் பினர் இடையே சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையர் அறிவித்த பின்னர் மறுதேர்தல் நடத்தப்படும் என்றார்.
வாக்குவாதம்
இதற்கிடையே வால்பாறை நகராட்சி கவுன்சிலர்கள் 12 பேர் பொள்ளாச்சியை அடுத்த கம்பாலபட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களிடம் தி.மு.க. நிர்வாகிகள் சென்று தலைமை அறிவித்த வேட்பாளரை தேர்வு செய்யும்படி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது கவுன்சிலர்களுக்கும், தி.மு.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.