மன்னார்குடி நகராட்சி தலைவராக மன்னை சோழராஜன் தேர்வு
தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நள்ளிரவில் வேட்பாளர் மாற்றப்பட்டார். இதனால் மன்னார்குடி நகராட்சி தலைவராக மன்னை சோழராஜன் தேர்வு செய்யப்பட்டார்.;
மன்னார்குடி:
தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நள்ளிரவில் வேட்பாளர் மாற்றப்பட்டார். இதனால் மன்னார்குடி நகராட்சி தலைவராக மன்னை சோழராஜன் தேர்வு செய்யப்பட்டார்.
மன்னார்குடி நகராட்சி
மன்னார்குடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. 26, அ.தி.மு.க. 4, அ.ம.மு.க. 2, சுயேச்சை ஒருவர் வெற்றி பெற்றுள்ளனர். நேற்றுமுன்தினம் தி.மு.க. தலைமை நகராட்சி தலைவர் வேட்பாளராக மீனாட்சியை அறிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த வெற்றி பெற்ற தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை உள்பட 26 பேரும் நகரச்செயலாளர் வீரா.கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் தலைமையின் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்றும், மேலும் மன்னை நாராயணசாமியின் பேரன் சோழராஜனை தலைவர் பதவிக்கு அறிவிக்க வேண்டும் என்றனர். இதனால் மன்னார்குடியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து
தி.மு.க.வை சேர்ந்த 25 உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை என 26 பேரும் மன்னார்குடியிலிருந்து இரண்டு வேன்களில் வெளியூருக்கு சென்று தங்கி விட்டனர்.
வேட்பாளர் மாற்றம்
சோழராஜனை நகராட்சி தலைவராக அறிவித்தால் மட்டுமே நகரசபை தலைவர் தேர்தலில் கலந்துகொள்ள வருவோம் என 26 உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க. தலைமை நேற்றுமுன்தினம் நள்ளிரவு நகரசபை தலைவர் வேட்பாளராக த.சோழராஜனை அறிவித்தது. இதையடுத்து நேற்று காலை வெளியூரில் தங்கி இருந்த 26 உறுப்பினர்கள் மன்னார்குடிக்கு வந்து தலைவர் தேர்தலில் கலந்து கொண்டனர்.
போட்டியின்றி தேர்வு
தலைவர் தேர்தலில் த.சோழராஜன் மட்டுமே போட்டியிட மனுதாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் தேர்தல் அதிகாரியான மன்னார்குடி நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், மன்னார்குடி நகராட்சி தலைவராக த.சோழராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். பின்னர் சோழராஜனுக்கு வெற்றி சான்றிதழை சென்னு கிருஷ்ணன் வழங்கி நகராட்சி தலைவராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
துணைத்தலைவராக தி.மு.க.வேட்பாளர் கைலாசம் தேர்வு
மன்னார்குடி நகராட்சி துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட 4-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கைலாசம் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தார். வேறுயாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து கைலாசம் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், மன்னார்குடி நகராட்சி ஆணையருமான சென்னுகிருஷ்ணன் அறிவித்தார். பின்னர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கைலாசத்திடம் வழங்கி, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.