அய்யா வைகுண்டர் அவதார தின விழா
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா கொண்டாடப்பட்டது;
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அவதார தின விழா
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 190-வது அவதார தின விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெற்றது. காலை 7 மணியளவில் சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு, அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வந்தனர்.
அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் ‘அய்யா சிவசிவ அரகரா அரகரா’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கியவாறு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். தொடர்ந்து அவதார தின விழா பணிவிடை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதர்மம், பிரசாதம் வழங்கப்பட்டது.
அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி
முன்னதாக நேற்று முன்தினம் அதிகாலையில் பணிவிடை, உகபடிப்பு, அன்னதர்மம், மதியம் உச்சிபடிப்பு, பணிவிடை, அன்னதர்மம் நடைபெற்றது. இரவில் பணிவிடையை தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாகராஜன், பாம்பன்குளம் நந்தினி ஆகியோர் திரு ஏடு வாசித்தனர்.
தொடர்ந்து அகிலத்திரட்டில் வாழ்வியல் கருத்து மற்றும் அய்யா வைகுண்டரின் அவதார மகிமை என்ற தலைப்பில் அகிலத்திரட்டு அம்மானை கருத்துரை நடைபெற்றது. பின்னர் ‘செந்தூர்பதியில் உதித்த அய்யா வைகுண்டர்' அகிலத்திரட்டில் அதிகம் வலியுறுத்துவது சமய புரட்சியா? சமுதாய புரட்சியா? என்ற தலைப்பில் அய்யாவழி சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீகுரு சிவச்சந்திரரின் அய்யாவின் அருளிசை வழிபாடு நடந்தது.
அய்யா வைகுண்டர் அவதார தினமான நேற்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
விழாவையொட்டி திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திரளான பக்தர்கள் வழிபாடு
விழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி வஷித்குமார், நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, பொருளாளர் ராமையா நாடார், துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன்,
இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், வரதராஜ பெருமாள், செல்வின், சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, ராமமூர்த்தி, கணேசன், சங்கரன் யாதவ், சுதேசன், டி.பாலகிருஷ்ணன், ஆதிநாராயணன், எஸ்.பாலகிருஷ்ணன்,
திருச்செந்தூர் கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், தொழில் அதிபர்கள் இளவல் எஸ்.அன்பழகன், செல்வபெருமாள், ராஜமோகன், ராஜமுருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.