பழனி உள்பட 3 நகராட்சிகளில் தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டியின்றி தலைவர், துணைத்தலைவராக தேர்வு
பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டியின்றி தலைவர், துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.
பழனி:
பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டியின்றி தலைவர், துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.
மறைமுக தேர்தல்
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் அமோக வெற்றிபெற்றனர். இதில், பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் பெரும்பான்மை பலத்துடன் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். இதையடுத்து நகராட்சி தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.
பழனி நகராட்சி
பழனி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. 21 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 2 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 8 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றதால் அக்கட்சி சார்பில் நகராட்சி தலைவர் வேட்பாளராக 23-வது வார்டு கவுன்சிலர் உமாமகேஸ்வரி அறிவிக்கப்பட்டார். துணைத்தலைவராக 15-வது வார்டு கவுன்சிலரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கந்தசாமி அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் உமாமகேஸ்வரி தலைவராகவும், கந்தசாமி துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு நகராட்சி ஆணையர் கமலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கொடைக்கானல்
இதேபோல் கொடைக்கானல் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில், 16 வார்டுகளில் தி.மு.க.வும், 4 வார்டுகளில் அ.தி.மு.க.வும் வெற்றிபெற்றது. ம.தி.மு.க. ஒரு வார்டிலும், 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றனர். இதில், 2 சுயேச்சை வேட்பாளர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் பெரும்பான்மை பலத்துடன் கொடைக்கானல் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
இந்தநிலையில் மறைமுக தேர்தலில் 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செல்லத்துறை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக 21-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் மாயக்கண்ணன் தேர்வு செய்யப்பட்டார். இவர்களுக்கு நகராட்சி ஆணையர் நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்ததுடன், பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதில், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், நகரமைப்பு அலுவலர் அப்துல் நாசர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
ஒட்டன்சத்திரம்
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 17 வார்டுகளில் தி.மு.க.வும், ஒரு வார்டில் காங்கிரசும் வெற்றிபெற்றது. இதற்கிடையே நேற்று நடந்த மறைமுக தேர்தலில் 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திருமலைசாமி போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வெள்ளைச்சாமி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களுக்கு நகராட்சி ஆணையர் தேவிகா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர்கள் அனைவரும் அமைச்சருடன் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.