கட்சி அலுவலகத்தில் கணவருடன், தி.மு.க. வேட்பாளர் தர்ணா
கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் சத்தியவாணி வெற்றி பெற்றார். இதனால் கட்சி அலுவலகத்தில் கணவருடன், தி.மு.க. வேட்பாளர் தர்ணாவில் ஈடுபட்டார்.
ஊட்டி
கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் சத்தியவாணி வெற்றி பெற்றார். இதனால் கட்சி அலுவலகத்தில் கணவருடன், தி.மு.க. வேட்பாளர் தர்ணாவில் ஈடுபட்டார்.
மறைமுக ேதர்தல்
நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 8 வார்டுகளில் தி.மு.க., 3 வார்டுகளில் காங்கிரஸ், 2 வார்டுகளில் சுயேச்சை வெற்றி பெற்றது. அ.தி.மு.க., பா.ஜனதா தலா ஒரு வார்டில் வென்றது. இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதில் 15-வது வார்டு கவுன்சிலரான நாகம்மாள் தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவரை எதிர்த்து 2-வது வார்டு கவுன்சிலரான சத்தியவாணி சுயேச்சையாக களம் இறங்கினார். இதனால் பரபரப்பு நிலவியது.
சுயேச்சை வேட்பாளர் வெற்றி
மேலும் தி.மு.க. கட்சியினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உண்டானது. உடனே பேரூராட்சி அலுவலகத்தை போலீசார் பூட்டி கவுன்சிலர்கள் தவிர மற்றவர்களை வெளியே அனுப்பினர். மறைமுக தேர்தல் முடிவில் சுயேச்சை வேட்பாளர் சத்தியவாணி 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் ஆவணங்களில் கையெழுத்திட்டு பதவி ஏற்று கொண்டார்.
தர்ணா போராட்டம்
இதற்கிடையே தன்னை திட்டமிட்டு சதி செய்து தோற்கடித்துவிட்டதாக கூறி ஊட்டியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நாகம்மாள் தனது கணவரான பேரூராட்சி முன்னாள் தலைவர் சின்னானுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட செயலாளர் சதி செய்ததாகவும், தி.மு.க. உறுப்பினர்களே தன்னை தோற்கடித்ததாகவும் கூறி கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் தரையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.