கும்மிடிப்பூண்டி அருகே புதரில் கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே புதரில் கஞ்சா பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-04 14:34 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் அருகே உள்ள காரமணி மேடு கிராமத்தில் உள்ள தைலமரதோப்பு புதரில் சந்தேகத்திற்கு இடமான பொட்டலங்கள் கிடப்பதாக நேற்று முன்தினம் ஆரம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் அங்கு நேரில் சென்று சோதனை செய்தனர்.

அப்போது, குறிப்பிட்ட புதரில் 26 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று காட்டு அப்பாவரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது27), பெரிய நத்தம் கிராமத்தை சேர்ந்த நிஷாந்த் (21) மற்றும் தலையாரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்