காய்கறிகளை விற்பனை செய்ய மானிய விலையில் வாகனங்கள்: வேளாண்மை துணை இயக்குனர்
திருவள்ளூர் மாவட்டம் வேளாண் வணிக துணை இயக்குனர் ராஜேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;
தமிழக முதல்-அமைச்சரின் சீரிய திட்டமான நடமாடும் உழவர் சந்தை திட்டம் கொரோனா காலத்தில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்தது. இந்த நடமாடும் உழவர் சந்தை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் வாகனங்கள் மூலம் மானிய விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியில் ஈடுபட விரும்புவோர் 21 வயது முதல் 45 வயது உள்ளவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். உழவர் சந்தையில் நிர்ணயிக்கப்படும் விலையை மட்டுமே பின்பற்ற வேண்டும். வேளான் துறையால் ஒதுக்கப்படும் இடங்களுகளில் மட்டுமே காய்கறிகளை விற்க வேண்டும். இந்த பணியில் சேர விரும்புபவர்களுக்கு மானிய விலையில் வாகனம் வழங்கப்படும்.
இதற்காக வேளாண் துணை இயக்குனர் அலுவலகம், ஊத்துக்கோட்டை ரோடு, ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகம் பெரும்பாக்கம் என்ற முகவரியில் அனுகி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை வருகிற 7-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.