ஊத்துக்கோட்டையில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தொடர் முழக்க போராட்டம்

ஊத்துக்கோட்டையில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.

Update: 2022-03-04 12:19 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வேலகாபுரம், செல்லம்பட்டி, தொளவேடு, வடமதுரை கிராமங்களில் பழங்குடி இன மக்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். அதேபோல் மெய்யூர், வேம்பேடு, அரியத்தூர், ஏனம்பாக்கம் கிராமங்களில் மலைவாழ் மக்கள் அதிகமானோர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் மூலம் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் விரைவில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலக அதிகாரிகள் உறுதியளித்தனர் ஆனால் இதுவரை வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வில்லை. 

இதை கண்டித்தும், உடனே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே பழங்குடி மற்றும் மலைவாழ் மக்கள் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமை தாங்கினார் செஞ்சய்யன, முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு கண்டன உரையாற்றினார். மாநில செயலாளர் கங்காதுரை, துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் ராஜா மற்றும் பலர் தொடர் முழக்கம் செய்தவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்