விஜயராகவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா

காஞ்சீபுரம் அருகே பிரசித்தி பெற்ற திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் தேர் உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-03-04 11:06 GMT
காஞ்சீபுரம் அருகே பிரசித்தி பெற்ற திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் 25-ந்தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமி காலை, மாலை இருவேளைகளிலும் சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை உள்ளிட்ட வாகனங்களில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாவித்தார். இந்த நிலையில் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி மலர் அலங்காரத்தில், மேளதாளங்கள், அதிர்வெட்டுகள் முழங்க எழுந்தருளினார். திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வழிப்பட்டனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என விண்ணதிர பக்திகரகோஷமிட்டனர்.

இந்த திருவிழாவில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பரந்தாமகண்ணன், கோவில் பணியாளர்கள், திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் உற்சவம் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்