‘விங்க்ஸ் டூ பிளை’ திட்டத்தின் மூலம் கல்வி சுற்றுலா செல்லும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

பெருநகர சென்னை மாநகராட்சி, கல்வித்துறையானது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ‘விங்க்ஸ் டூ பிளை’ திட்டத்தின் மூலம் 2021-2022-ம் கல்வியாண்டில் 8 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்துக்கு கல்விச்சுற்றுலாவாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.;

Update: 2022-03-04 08:49 GMT
பெருநகர சென்னை மாநகராட்சி, கல்வித்துறையானது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ‘விங்க்ஸ் டூ பிளை’ திட்டத்தின் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக 6 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் சென்னை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன் குறித்து பல்வேறு நிலைகளில் போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்து சென்று வருகின்றனர்.

அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு மலேசியாவுக்கும், 2017-ம் ஆண்டு ஜெர்மனிக்கும், 2018-ல் அமெரிக்காவில் உள்ள நாசாவுக்கும், 2019-ல் சிங்கப்பூருக்கும் கல்விச்சுற்றுலா சென்று வந்துள்ளனர். 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடு அழைத்து செல்ல இயலாத காரணத்தினால், அவர்களின் சாதனையை பாராட்டி ‘லேப்டாப்’ வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, 2021-2022-ம் கல்வியாண்டில் 8 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்துக்கு கல்விச்சுற்றுலாவாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை கமிஷனர் டி.சினேகா, கல்வி அலுவலர் ஆர்.பாரதிதாசன், உதவி கல்வி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்