சுயேச்சை கவுன்சிலர் கடத்தப்பட்டதால் பரபரப்பு
மயிலாடி பேரூராட்சியில் சுயேச்சை கவுன்சிலர் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஞ்சுகிராமம்:
மயிலாடி பேரூராட்சியில் சுயேச்சை கவுன்சிலர் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுயேச்சை கவுன்சிலர்
குமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி-3 இடங்களையும், அ.தி.மு.க.-4 இடங்களையும், பா.ஜனதா-5 இடங்களையும், சுயேச்சை-3 இடங்களையும் பிடித்தன.
இதில் 8-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட சிவசங்கர் (வயது 48) 87 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து நேற்று முன்தினம் 8-வது வார்டு கவுன்சிலராக பதவியேற்றுக் கொண்டார்.
மயிலாடி பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே கடும் போட்டி உருவாகி உள்ளது. இரு கட்சிகளும் சுயேச்சை கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க தீவிரம் காட்டின.
கடத்தல்
இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே நேற்று இரவு 10 மணியளவில் சுயேச்சை கவுன்சிலர் சிவசங்கர் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு பழம் வாங்க செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல இடங்களில் ேதடினர். மேலும், அக்கம் பக்கத்தில் சிவசங்கர் பற்றி விசாரித்தனர்.
அப்போது, கடையில் பழம் வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பியபோது மயிலாடி சந்திப்பில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் திடீரென சிவசங்கரின் மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும், பின்னர் அந்த கும்பல் சிவசங்கரின் வாயில் துணியை திணித்து காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது.
11 பேர் மீது வழக்கு
இதுகுறித்து சிவசங்கரின் மனைவி அசுவதி (37) அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி, அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள், சிலருடன் சேர்ந்து சிவசங்கரை கடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க.வினர் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் மயிலாடி சந்திப்பில் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் கலைந்தனர். இன்று தேர்தல் நடைபெற இருந்தநிலையில் சுயேச்சை கவுன்சிலர் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.