தி.மு.க. சார்பில் வக்கீல் மகேஷ்- பா.ஜனதா சார்பில் மீனாதேவ் போட்டி
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் வக்கீல் மகேசும், பா.ஜனதா சார்பில் மீனாதேவும் போட்டியிடுகிறார்கள். இன்று நடைபெறும் மறைமுக தேர்தலில் முடிவு தெரியும்.;
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் வக்கீல் மகேசும், பா.ஜனதா சார்பில் மீனாதேவும் போட்டியிடுகிறார்கள். இன்று நடைபெறும் மறைமுக தேர்தலில் முடிவு தெரியும்.
மேயர்-துணை மேயர் தேர்தல்
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 22-ந் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கவுன்சிலர்களும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நாகர்கோவில் மாநகராட்சி மேயர், 4 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலும், பிற்பகலில் மாநகராட்சி துணை மேயர், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலும் நடக்கிறது.
தி.மு.க.-பா.ஜனதா போட்டி
நாகர்கோவில் மாநகராட்சியின் மேயர் பதவியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வக்கீல் மகேஷ் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அ.தி.மு.க ஆதரவுடன் பா.ஜனதா சார்பில் மீனாதேவ் களமிறங்கியுள்ளார். இவர்களில் மாநகராட்சி மேயர் யார்? என்பதை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் இன்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும். துணை மேயருக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் மேரி பிரின்சி போட்டியிடுகிறார். தி.மு.க. மகளிரணி தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ள இவர் ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணிக்கு 32 கவுன்சிலர்கள், பா.ஜனதாவுக்கு 11 கவுன்சிலர்கள், அ.தி.மு.க.வுக்கு 7 கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் 2 பேர் உள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்ற தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், அ.தி.மு.க. ஆதரவுடன் பா.ஜனதா தனது வேட்பாளரை அறிவித்து மேயர் பதவியை கைப்பற்றுவதில் முனைப்பு காட்டுகிறது. எனவே இன்று நடைபெறும் மறைமுக தேர்தல் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மகேஷ் வாழ்க்கை குறிப்பு
தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மகேஷ், புத்தளம் கல்லடிவிளையை சோ்ந்த ரங்கசாமி- காசி தங்கம் தம்பதிக்கு 1965-ம் ஆண்டு மகனாக பிறந்தவர். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ. (பொருளாதாரம்) முடித்த அவர், மதுரை சட்டக்கல்லூரியில் பி.எல். படித்தார்.
1996 முதல் 2001-ம் ஆண்டு வரை மாவட்ட அரசு வனத்துறை வக்கீலாகவும், 2006 -ம் ஆண்டு முதல் 2009 -ம் ஆண்டு வரை மாவட்ட அரசு வக்கீலாகவும் பணியாற்றினார். 2 முறை நாகர்கோவில் வக்கீல்கள் சங்க தலைவராகவும் இருந்த அவர் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு பொருளாளராகவும் உள்ளார்.கட்சியில் 1996 முதல் 2001-ம் ஆண்டுவரை நாகர்கோவில் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளராகவும், பின்னர் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும், 2008 முதல் நாகர்கோவில் நகர செயலாளராகவும் இருந்த அவர் தற்போது மாநகர செயலாளராகவும் உள்ளார்.
மீனாதேவ் வாழ்க்கை குறிப்பு
பா.ஜனதா சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மீனாதேவ், நாகர்கோவில் இந்து கல்லூரி பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவருடைய மகள் ஆவார். அவருக்கு வயது 49 ஆகிறது. இவருடைய கணவர் பித்யா தேவ். மீனாதேவ் நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் பி.எஸ்.சி. இளங்கலை படிப்பு படித்துள்ளார்.
பா.ஜனதா கட்சியில் சாதாரண தொண்டராக பணியாற்றிய மீனாதேவ், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை நாகர்கோவில் நகராட்சி தலைவியாக பதவி வகித்தவர். பின்னர் 2011 முதல் 2016 ஆண்டு வரை மீண்டும் நாகர்கோவில் நகராட்சி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.