‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருவிளக்கு ஒளிருமா?
அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு ஒன்று கடந்த 2 மாதங்களாக உடைந்து தொங்கிய நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழ வாய்ப்பு உள்ளது. மேலும் தெருவிளக்கு எரியாததால் அந்த பகுதி இருள் சூழ்ந்தபடி காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனே தெருவிளக்கை ஒளிர செய்யவும், தொங்கியவாறு காணப்படுவதை சரிசெய்து கொடுக்கவும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன், புதுப்பாளையம்
தார்சாலையை சீரமைக்க வேண்டும்
கோபி நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள தார் ரோடு பெயர்ந்து கல், மண்ணாக குவிந்து காணப்படுகிறது. இதனால் இந்த ரோடு வழியாக வாகனங்கள் தட்டு தடுமாறி சென்று வருகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீேழ விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். எனவே சேதமடைந்த அந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாதன், ேகாபி.
வீணாகும் குடிநீர்
கோபி நகராட்சிக்கு உள்பட்ட 19-வது வார்டில் உள்ள பச்சமலை செல்லும் பிரதான சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது. குடிநீர் வீணாவதை தடுக்க குழாய் உடைப்பை சரிசெய்ய உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி
ஆபத்தான மின்கம்பம்
ஈரோடு சூளை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. ஆகவே அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோஜ்குமார், சூளை
ஆபத்தான குழி
ஈரோடு நாச்சியப்பாவீதி மாநகராட்சி மண்டபம் முன்பு ஆபத்தான குழி உள்ளது. இந்த குழியில் பலர் தவறி விழுந்து விட நேரிடுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் சிரமப்படுகிறார்கள். எனவே ஆபத்தான இந்த குழியை மூட சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
இளங்கோ, ஈரோடு.