ஈரோடு மேயர்- துணை மேயர் வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு

ஈரோடு மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களை தி.மு.க. தலைமை அறிவித்து உள்ளது.

Update: 2022-03-03 22:26 GMT
ஈரோடு
ஈரோடு மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களை தி.மு.க. தலைமை அறிவித்து உள்ளது. 
வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-
மேயர்
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சு.நாகரத்தினம் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவருடைய தந்தை மோகன். ஈரோடு சென்னிமலை ரோடு கே.எஸ்.அவென்யூ லட்சுமி கார்டன் பகுதியில் நாகரத்தினம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 1971-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி பிறந்தவர். 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவருடைய கணவர் சுப்பிரமணியன். இவர்களுக்கு கவின் ராஜ்குமார், ஜெயபிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர். நாகரத்தினம் 1986-ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளார். இவர் ஈரோடு மாநகராட்சி 50-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார். இவருடைய கணவர் சுப்பிரமணியன், ஈரோடு மாநகர தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை மேயர்
இதேபோல் ஈரோடு மாநகராட்சி துணை மேயராக, ஈரோடு வீரப்பன் சத்திரம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்த வேலாயுதம் மகன் செல்வராஜ் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி பிறந்தவர். 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் ஈஸ்வரி. இவர்களுக்கு திருமணமான கீதா என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
செல்வராஜ் தி.மு.க.வில் 1976-ம் ஆண்டில் உறுப்பினராக சேர்ந்தார். இவர், 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வீரப்பன் சத்திரம் நகராட்சியின் துணை தலைவராக பதவி வகித்துள்ளார். தி.மு.க.வில் ஒன்றிய பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதியாகவும் பதவி வகித்துள்ளார். தற்போது ஈரோடு பெரியசேமூர் பகுதி தி.மு.க. செயலாளராக உள்ளார். இவர் ஈரோடு மாநகராட்சி 21-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்