உக்கிர போர் நடைபெற்று வரும் உக்ரைனில் 200 பேர் தவிப்பு
உக்ரைனில் 200 கர்நாடக மாணவர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நேற்று கலந்துரையாடினார். அப்போது விரைவில் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பெங்களூரு: உக்ரைனில் 200 கர்நாடக மாணவர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நேற்று கலந்துரையாடினார். அப்போது விரைவில் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
200 கர்நாடக மாணவர்கள் தவிப்பு
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து நேற்றுடன் 8 நாட்கள் ஆகிவிட்டது. இருநாடுகள் இடையே உக்கிரமான போர் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு போர் தீவிரமடைந்து உள்ளது. இதனால் அங்கு இந்தியர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இதில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாணவர் நவீன், ரஷியாவின் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் இன்னும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவில்லை. இதற்கிடையே இந்தியர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த 200 பேர் இன்னும் உக்ரைனில் சிக்கியிருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தெரிவித்தார். அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
செல்போனில் பேச்சு
பெங்களூருவில் இருந்தபடி உக்ரைனில் சிக்கி தவிக்கும் கர்நாடக மாணவர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று செல்போனில் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் தாங்கள் படும் கஷ்டங்களை எடுத்து கூறினர். தாங்கள் கார்கிவ் நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிக்கு நடந்து வந்துள்ளோம் என்றும், தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும் கூறினார்.
அப்போது பேசிய பசவராஜ் பொம்மை, "நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். வெளியுறவுத்துறையிடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். உங்களை பாதுகாப்பாக மீட்டு கர்நாடகம் அழைத்துவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். உங்களுக்கு அனைத்து வகையான உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
31 பேர் நாடு திரும்பினர்
அதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களுடன் நான் பேசினேன். அவர்கள் தங்களின் கஷ்டங்களை கூறினர். உங்களை விரைவாக மீட்டு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளேன்.
தற்போது கார்கிவ் நகரில் கர்நாடகத்தை சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெளியுறவுத்துறையுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என்றார்.
31 பேர் நாடு திரும்பினர்
இதற்கிடையே நேற்று கர்நாடகத்தை சேர்ந்த மேலும் 31 மாணவர்கள் பெங்களூரு திரும்பினர். அவர்கள் டெல்லி மற்றும் மும்பைக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமன நிலையத்திற்கு வந்தனர்.
உக்ரைனில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அவர்களில் பெங்களூரு நெலமங்களா தாலுகா சொன்டேகொப்பாவை சேர்ந்த பாவனா கூறியதாவது:-
உடல் நடுங்கும் குளிர்
நாங்கள் கர்நாடகம் வர கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி டிக்கெட் முன்பதிவு செய்தோம். அன்றைய தினமே கீவ் நகரின் விமான நிலையத்தில் ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் எங்களால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. உயிருடன் தாய்நாட்டிற்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கவில்லை. எங்கள் கல்லூரி நிர்வாகம் எங்களை அவர்களின் பஸ்களில் அழைத்து வந்து எல்லையில் விட்டனர்.
ருமேனியா நாட்டிற்குள் நுழைய நாங்கள் 10 கிலோ மீட்டர் தூரம் பைகளுடன் நடந்து வந்தோம். உடல் நடுங்கும் குளிரில் நாங்கள் நடந்து வரும் நிலை ஏற்பட்டது. ருமேனியா எல்லையில் இருந்து உக்ரைனுக்குள் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நாங்கள் ருமேனியா நாட்டின் எல்லைக்குள் நுழைய 24 மணி நேரம் காத்திருந்தேன். அதன் பிறகே எங்களுக்கு உள்ளே நுழைய அனுமதி கிடைத்தது.
இவ்வாறு பாவனா கூறினார்.
சீதோஷ்ணநிலை
பெங்களூரு குருபரஹள்ளியை சேர்ந்த மாணவர் தனஞ்செயன் காலங்கே கூறுகையில், "நான் கடந்த ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் மருத்துவ கல்வி படிக்க உக்ரைனுக்கு சென்றேன். நான் உக்ரைன் எல்லை பகுதியில் உள்ள கல்லூரியில் தான் படித்தேன். அதனால் எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. உக்ரைன் எல்லையை தாண்ட நான் உடல் ரீதியாக கடுமையாக போராட வேண்டியதாயிற்று. அங்கு நிலவும் சீதோஷ்ணநிலை மிக மோசமாக உள்ளது" என்றார்.
கண்ணீர் கோரிக்கை
இதன் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள கன்னட மாணவர்களில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உக்ரைனில் சிக்கி தவிக்கும் கர்நாடக மாணவ-மாணவிகள் அனைவரையும் உடனடியாக மீட்டு வர வேண்டும் என்று அவர்களது பெற்றோர், உறவினர்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.