உக்ரைன் போரால் பங்குச்சந்தையில் நஷ்டம்
உக்ரைன் போரால் பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டு, லட்சக்கணக்கில் பணத்தை இழந்த தம்பதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
மதுரை,
உக்ரைன் போரால் பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டு, லட்சக்கணக்கில் பணத்தை இழந்த தம்பதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
மதுரை தம்பதி
மதுரை தெப்பக்குளம் பழைய குயவர்பாளையம் பச்சரிசிக்கார தோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 46). இவருடைய மனைவி லாவண்யா (34). இவர்களுக்கு ரக்ஷிதா (15) என்ற மகளும், அர்ஜூன் (13) என்ற மகனும் உள்ளனர். ரக்ஷிதா 10-ம் வகுப்பும், அர்ஜூன் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
நாகராஜன், பங்குச்சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். மேலும் பங்குச்சந்தை ஆலோசகராகவும் இருந்து வந்தார். பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்காக நாகராஜன் சிலரிடம் லட்சக்கணக்கில் அதிக வட்டிக்கு கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. வங்கியிலும் கடன் வாங்கி இருக்கிறார்.
உக்ரைன் போர்
இந்தநிலையில் உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் காரணமாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. இதனால் அதில் முதலீடு செய்திருந்த நாகராஜனுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், கடன் கொடுத்திருந்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், நாகராஜன், அவருடைய மனைவி லாவண்யா ஆகியோர் மன உளைச்சலில் இருந்தனர்.
இதற்கிடையே, நேற்றுமுன்தினம் காலை நாகராஜனின் மகள் மற்றும் மகன் பள்ளிக்கு சென்று விட்டனர். வழக்கமாக நாகராஜன்தான், அவர்களை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவார். ஆனால், நேற்று முன்தினம் மாலை, நீண்ட நேரமாகியும் அவர் வராததால், அந்த வழியாக சென்ற லாவண்யாவின் உறவினர் ஒருவர் அந்த குழந்தைகளை பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து, அவர், குழந்தைகள் இருவரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
தற்கொலை
இதனை தொடர்ந்து, அவர் நாகராஜன் மற்றும் லாவண்யாவை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்ற தகவல் தெரியாததால் குழந்தைகளை தனது வீட்டிலேயே வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன், நேற்று முன்தினம் நள்ளிரவில் நாகராஜனின் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது, வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அவர்கள், ஜன்னல் வழியாக வீட்டின் அறைக்குள் பார்த்தனர். அங்கு நாகராஜன் மற்றும் லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கியது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே இதுபற்றி தெப்பக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணை
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ேள சென்று நாகராஜன் மற்றும் லாவண்யா ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான முழுமையாக காரணம் என்ன என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.
நாகராஜனின் வீட்டில் இருந்த மடிக்கணினி, செல்போன், பென்டிரைவ் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பங்குச்சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டம்தான் அவர்களது இந்த துயர முடிவுக்கு காரணம் என கூறப்பட்டாலும், தீவிர விசாரணைக்கு பின்னரே தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
மதுரையில் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு பெற்றோர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.