‘அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே இருந்தோம்’-உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய சேலம் மாணவி பேட்டி
‘அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே இருந்தோம்’ என்று உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய சேலம் மாணவி தெரிவித்தார்.;
சேலம்:
‘அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே இருந்தோம்’ என்று உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய சேலம் மாணவி தெரிவித்தார்.
கலெக்டருடன் சந்திப்பு
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் உக்கிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் கதிர்செட்டி தெருவை சேர்ந்தவர் குமார். இவர் காடையாம்பட்டி வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மகள் அனிதா (வயது 22). இவர் உக்ரைன் நாட்டில் உஷார்டு என்ற பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வந்தார். போர் சூழ்நிலையில் சிக்கி தவித்த அந்த மாணவி இந்திய அரசால் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு சேலம் திரும்பினார். நேற்று மாணவி அனிதா தனது பெற்றோருடன் கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து பேசினார். பின்னர் அவர்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.
அச்சத்தில் இருந்தோம்
பின்னர் இதுகுறித்து மாணவி அனிதா கூறியதாவது:-
உக்ரைன் நாட்டில் கீவ் நகரில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் தாங்கள் வசித்து வந்ததால் ஆபத்து குறைவாக இருந்தது. இருந்தாலும் அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சத்திலேயே இருந்தோம். போர் ஏற்பட்டதால் ஏ.டி.எம்.களில் மக்கள் அதிகளவு கூடியதாலும், வங்கிகளில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டதாலும் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய தூதரகம் மூலம் கல்லூரி நிர்வாகம் பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்தது. பின்னர் ஹங்கேரியில் இருந்து விமானம் மூலம் டெல்லி, சென்னை வழியாக வீட்டுக்கு திரும்பினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.