பெங்களூருவில் போராட்டம், ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

காங்கிரஸ் பாதயாத்திரையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பெங்களூருவில் போராட்டம், ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-03-03 21:28 GMT
பெங்களூரு: காங்கிரஸ் பாதயாத்திரையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பெங்களூருவில் போராட்டம், ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் தாமதம்

மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பாதயாத்திரையால் பெங்களூரு நகரில் பல்வேறு சாலைகளில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.

 இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டு தலைமை நீதிதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது பெங்களூருவில் நடந்து வரும் பாதயாத்திரையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். மேக்கரி சர்க்கிளில் போக்குவரத்து நெரிசல் உண்டானதால், நீதிபதிகளே 1 மணிநேரம் நெரிசலில் சிக்கி கோர்ட்டுக்கு தாமதமாக வந்துள்ளனர். இதனால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள். தினமும் வேலை செய்தும், சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்லும் நபர்களின் நிலை என்னவாகும் என்று தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.

தடை விதிக்க உத்தரவு

மேலும் காங்கிரஸ் கட்சி நடத்திய பாதயாத்திரையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதால், பெங்களூருவில் போராட்டம், ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு, தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவு பிறப்பித்தார்.

 மேலும் போராட்டம், ஊர்வலம் நடத்தினாலும், பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டும் பாதிக்கப்படாது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன் சுதந்திர பூங்காவில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தினாலும், எந்த விதமான போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரிதுராஜ், நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் செய்திகள்