சிலிண்டர் வெடித்த விபத்தில் தீக்காயம் அடைந்த மேலும் 4 பேர் சாவு

யாதகிரியில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-03-03 21:09 GMT
பெங்களூரு: யாதகிரியில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

சிலிண்டர் வெடித்தது

யாதகிரி மாவட்டம் சகாபுரா தாலுகா தூரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாகேப் கவுடா. இவரது மருமகளுக்கு கடந்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக வீட்டு வளாகத்தில் வைத்து கியாஸ் அடுப்பு மூலமாக சமையல் செய்யப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது.

 இந்த தீவிபத்தில் குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் 1½ வயது குழந்தை உள்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரிகளில் உயிர் இழந்திருந்தனர். பலத்த தீக்காயம் அடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மேலும் 4 பேர் உயிர் இழந்த பரிதாபம் நடந்துள்ளது.

பலி 11 ஆக உயர்வு

அதாவது கல்லப்பா சரணப்பா லக்கிசட்டி (வயது 50), சென்னவீரா சங்கண்ணா (30), சங்கண்ணாகவுடா குருலிங்கப்பா கவுடா (55), பசவய்யா ஆகிய 4 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர். இதன்மூலம் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் சிலிண்டா் வெடித்த சம்பவத்தில் தினமும் ஒருவர் அல்லது 2 பேர் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் தூரனஹள்ளி கிராம மக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சகாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்